பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் உள்ள மூலவர் திருமேனியில் இருந்த நகைகள் மாயமானதாகவும், உற்சவர் சிலை சேதப்படுத்தப்பட்டதாகவும் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரெங்கராஜன் என்பவர் சென்ைன உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இது தொடர்பாக தமிழக சிலைக்கடத்தல் மற்றும் தடுப்புப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.
இதன் அடிப்படையில் கடந்த 6,7 தேதிகளில் ஐஜி பொன்மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் ரங்கநாதர் கோவிலின் மூலவர் திருமேனியில் போர்த்தப்படும் அங்கியில் இருந்த வைரம், முத்து மற்றும் ரத்தின கற்கள் மாயமாகி இருப்பதாக யானை ராஜேந்திரன் என்பவர் குற்றம் சாட்டியிருந்தார். இத்தகைய சூழ்நிலையில் கோவிலின் வேணுகோபால சன்னதியில் உள்ள பாதாள அறையில் நகைகள் ஏராளமாக இருந்ததாகவும், அவற்றில் பல மாயமாகியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற கும்பாபிஷேகத்தின் போது பாதாள அறை திறக்கப்பட்டதாகவும்அப்போது தான் நகைகள் மாயமாகி இருக்கலாம் என்றும் பக்தர்கள் தரப்பில் கூறப்படுகிறது. மாயமான நகைகள் மற்றும் கற்களின் மதிப்பு கோடிகணக்கில் இருக்கும் என்கிற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY