பேண்ட்க்குள் 8.50 கோடி தங்கம்…கில்லாடி கொரிய பெண்கள் சிக்கினர்

98

ஹாங்காங்கில் இருந்து சென்னைக்கு நேற்று நள்ளிரவு 1.30 மணிக்கு கேத்வே பசிபிக் நிறுவன விமானம் வந்தது. அதில் 200 பயணிகள் வந்தனர். அவர்களை நுண்ணறிவு பிரிவினர், சுங்கத் துறையினர் கண்காணித்தனர். அப்போது சுங்கத் தீர்வை கட்டும் அளவுக்கு பொருட்களை கொண்டு வராத சாதாரண பயணிகள் வரும் வழியாக கொரிய நாட்டை சேர்ந்த 2 பெண்கள் வந்தனர். இருவரும் டிப்- டாப்பாக ஒரே மாதிரியான உடையணிந்திருந்தனர். சுங்க அதிகாரிகள் அவர்களை சோதனை செய்தனர். அதில் எதுவும் சிக்காததால் அவர்களை அனுப்பினர். அவர்கள் செல்லும்போது மீண்டும் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து தனி அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உடைகளை களைந்து பெண் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது 2 பேரும்  தங்கள் ஆடைக்கு உள்ளே மற்றொரு மினி ஆடை அணிந்திருந்தனர். அந்த ஆடைக்குள் ஏராளமான சிறு சிறு பைகள் வைத்து தைக்கப்பட்டு அதில் தங்கக் கட்டிகள் இருந்தன. இவ்வாறு இருவரிடமும் தலா 12 கிலோ என 24 கிலோ தங்கக்கட்டிகள் இருந்தன. இதன் மதிப்பு 8.50  கோடி. தங்கக் கட்டிகளை கொடுத்தது யார் என்பதை அவர்கள் தெரிவிக்க மறுத்தனர்.
 பாஸ்போர்ட் விவரங்களை ஆய்வு செய்தபோது 2 பேருக்கும் சர்வதேச தங்க கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. பின்னர்  2 பேரும் கைது செய்யப்பட்டனர். இது போல அவர்கள் பலமுறை தங்கம் கடத்தி வந்ததாக தெரிகிறது. ஹாங்காங் விமான நிலையத்தில் அவர்கள் எப்படி சிக்காமல் வந்ததால் ஹாங்ஹாங், சென்னை விமான நிலைய ஊழியர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

LEAVE A REPLY