அமெரிக்க செனட்சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய வம்சாவளி பெண் கமலா ஹாரிஸ். சென்னையை பூர்வீகமாக கொண்ட இவர், ஜனநாயக கட்சி சார்பில் கலிபோர்னியா மாகாணத்தில் போட்டியிட்டு செனட் சபை உறுப்பினரானார்.
மூத்த வக்கீலும், எழுத்தாளருமான கமலா ஹாரிசுக்கு ஜனநாயக கட்சியினர் மற்றும் அமெரிக்க மக்களிடையே மிகுந்த செல்வாக்கு உள்ளது. எனவே அடுத்த ஆண்டு (2020) நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் இவர் டிரம்பை எதிர்த்து களம் இறங்குவார் என அமெரிக்க ஊடகங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.

இந்நிலையில் இது குறித்து கமலா ஹாரிஸ் அளித்த பேட்டி:- அமெரிக்க மக்கள் தங்களுக்கான தலைவரை சரியாக தேர்வு செய்யும் திறனை கொண்டிருக்கிறார்கள். அதற்காி கூடுதல் பொறுப்பை நாம் அவர்களுக்கு வழங்க வேண்டும். யார் தலைமை பொறுப்புக்கு தகுதியானவர்? யார் தங்களை நேர்மையான முறையில் வழிநடத்துவார்? யார் தங்களின் பிரதிநிதியாக செயல்படுவார்? அதிகாரத்தில் இல்லாத போதும் யார் தங்களுக்காக குரல் கொடுப்பார்? ஆகியவற்றின் அடிப்படையில் மக்கள் தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். அடுத்த ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து நான் இன்னும் முடிவு செய்யவில்லை. ஆனால் ஒரு பெண்ணை ஜனாதிபதியாக ஏற்பதற்கு அமெரிக்கா தயாராக உள்ளது. அந்த பெண் நான் என்று கூறவில்லை. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து விரைவில் முடிவு எடுப்பேன் என்றார்.

LEAVE A REPLY