குடியரசு தலைவர், பிரதமர் உள்ளிட்ட விவிஐபிகளுக்கு ரூ.3600 கோடி செலவில் 12,  இத்தாலியை சேர்ந்த அகஸ்ட்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம், சொகுசு ஹெலிகாப்டர்கள் வாங்க 2007ம் ஆண்டு, மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது ஒப்பந்தம் போடப்பட்டது. இதில் இடைத் தரகராக செயல்பட்டவர் கிறிஸ்டியன் மைக்கேல். இதற்கு கிறிஸ்டியன் மைக்கேல் 30 மில்லியன் யூரோஸ் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. கிறிஸ்டியன் மைக்கேலுக்கு எதிராக, அமலாக்கத்துறை 2016ம் ஆண்டு ஜூன் மாதம், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. மேலும், இந்தியாவிலுள்ள பலருக்கும், ஹெலிகாப்டர் நிறுவனம் லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டுகள் எழத் தொடங்கின. இந்த புகார்களால், ஒப்பந்தம் போட்ட 6 ஆண்டுக்கு பிறகு, அதை மத்திய அரசு ரத்து செய்தது.

இந்நிலையில் இடைத் தரகர் கிறிஸ்டியன் மைக்கேல் துபாயில் அடைக்கலமானார். இந்தியாவின் கோரிக்கைக்கேற்ப நேற்றிரவு இந்தியாவிற்கு நாடு கடத்த உத்தரவிடப்பட்டது. இதை எதிர்த்து கிறிஸ்டியன் மைக்கேல் துபாய் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கை கோர்ட் கடந்த மாதம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து நேற்று இரவு, சிறப்பு விமானம் மூலம், டெல்லி கொண்டு வரப்பட்டார் மைக்கேல் கிறிஸ்டியன். இரவே, சிபிஐ அலுவலகத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தினர். இதன்பிறகு இன்று அவர் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

LEAVE A REPLY