பஞ்சாப் மாநிலத்தில் அமிர்தசரஸ் நகரத்தில், பொற்கோவிலுக்கு அருகில்தான் உள்ளது ஜாலியன் வாலாபாக்.

 1919ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தேதி , சீக்கியர்களுக்குப் புனித தினம். அன்று ஊரின் பொது இடமான ஜாலியன் வாலாபாக்கில் ரவுலட் சட்ட எதிர்ப்பு கண்டனக் கூட்டம் நடந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். மாலை சுமார் நாலரை மணிக்குக் கூட்டம் தொடங்கியது. ஒரு மணி நேரத்தில் ஜெனரல் டயர் 150 சிப்பாய்களோடு வந்திறங்கினான். முன்னறிவிப்பு ஏதுமின்றி, மக்களை நோக்கிச் சுட உத்தரவிட்டான். பெண்களும், குழந்தைகளும், மற்றவர்களும் உயிர் தப்பிக்க முண்டியடித்து ஓடினார்கள். அந்த இடம் சுவர்கள் சூழ்ந்த குறுகலான ஒற்றை நுழைவுப் பாதை மட்டுமே கொண்ட நாற்கர வடிவ நிலப்பகுதி. எனவே, மக்களால் அங்கிருந்து தப்பித்துச் செல்ல வழி இல்லாமல் போனது. துப்பாக்கிச் சூட்டில் மட்டுமின்றி நெரிசலில் சிக்கியும் பலர் மரணமடைந்தனர்.

வெறும் பத்து நிமிடத்தில் 1,650 ரவுண்டு குண்டுகள் சுடப்பட்டதில், 1,500 பேர் மரணமடைந்ததாகவும், 3,000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அன்றைய காங்கிரஸ் தலைவர்கள் பதிவு செய்தனர். பூங்காவுக்குள் சிக்கிய மக்கள், தப்பித்துச் செல்ல வழியில்லாமல்,அங்கிருந்த கிணற்றுக்குள் குதித்தனர். இதில் 120 பலியாயினர்.

அங்கே கூடியிருந்த மக்களைக் கலைக்க வேண்டும் என்பதற்காக மட்டுமில்லாமல், இந்திய மக்கள் மனதில் ஒரு பயத்தை ஏற்படுத்தவே நான் அப்படிச் சுட உத்தரவிட்டேன்”. என்று விசாரணை கமிஷன் முன்பு ஜெனரல் டயர் வாக்குமூலம் அளித்தான்.  

பிரிட்டனுக்குத் திரும்பிய ஜெனரல் டயர், 1927-ம் ஆண்டு  பக்கவாத நோய் தாக்கி பேச்சுத் திறன் இழந்து, இறந்தான். பஞ்சாப் துணை ஆளுநராக இருந்து, படுகொலைக்கு ஆதரவு தெரிவித்த மைக்கேல் ஓ டுவையர், லண்டன் திரும்பிய பிறகு, அவரை நுட்பமாகக் கண்காணித்து, ஜாலியன் வாலாபாக் சம்பவத்துக்குப் பின் 21 ஆண்டுகள் கழித்து, சுட்டுக்கொன்றார் பஞ்சாபைச் சேர்ந்த வீரர் உத்தம் சிங். அவருக்குப் பிரிட்டிஷ் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது.

LEAVE A REPLY