திமுக இளைஞர் அணி துணை செயலாளராக இருப்பவர் மகேஷ் பொய்யாமொழி . கடந்த சட்டமன்ற தேர்தலின்போது திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவானார். பல ஆண்டுகளாக  சென்னையில் இருந்த மகேஷ் திடீரென திருவெறும்பூர் தொகுதியில் களம் இறக்கப்பட்ட போது திமுகவில் சலசலப்பு ஏற்பட்டது. அப்போது பிரச்சாரத்திற்கு வந்த திமுக தலைவர் ஸ்டாலின் மகேஷ் எனது மகன் என கூறி சலசலப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்தார். உதயநிதியின் நெருங்கிய நண்பர் என்பதால் தமிழகம் முழுவதிலும் உள்ள திமுக மாவட்ட செயலாளர்கள் பலரும் மகேஷ் தொடர்பான இளைஞர் அணி நிகழ்ச்சிகள் என்றால் தனிக் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்திற்குள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில மாதத்திற்கு முன் சென்னையில் நடந்த திமுக ஆய்வு கூட்டத்தில் பேசிய திருநெல்வேலி மேற்கு மாவட்ட செயலாளர் சிவ. பத்மநாபன்  தன்னை மேலநீதத்தநல்லூர் ஒன்றிய செயலாளர் ராஜா மதிப்பதில்லை. சென்னையில் உள்ள சில நிர்வாகிகளை கையில் வைத்துக்கொண்டு எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும் சொல்வதில்லை என குற்றம்சாட்டி மனு கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் ஒன்றிய செயலாளர் ராஜா அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு விஜயகுமார் என்பவர் நியமிக்கப்பட்டார். மாவட்ட செயலாளர் நேரடியாக மகேஷ் பொய்யாமொழியின் பெயரை குறிப்பிடவில்லை என்றாலும் ராஜா நேரடியாக அவருடன் தொடர்பில் இருப்பதால் தன்னை மதிப்பதில்லை என்றே குற்றம் சாட்டி மனு கொடுத்தாக நெல்லை திமுகவினர் கூறினர்.

இந் நிலையில் கடந்த 7ம் தேதி ராஜா மீண்டும் ஒன்றிய செயலாளர் பதவியில் நியமிக்கப்படுவதாக கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் அறிக்கை ஒன்று முரசொலியில் வெளியானது. ராஜா மீண்டும் பொறுப்பில் நியமிக்கப்பட்ட விவகாரம் நெல்லை திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சியின் செயல் தலைவராக இருந்த ஸ்டாலினிடம் புகார் மனு அளிக்கப்பட்டு பதவி பறிக்கப்பட்ட நிலையில் மகேஷ் பொய்யாமொழி தலையிட்டு ராஜாவிற்கு பதவி வழங்கப்பட்டதாக புகார் கூறும் நெல்லை திமுகவினர் தங்களது எதிர்ப்பை கண்டன போஸ்டர்களாக ஒட்டியுள்ளனர். அதில் திமுக தலைவர் தளபதியா? மகேஷ் பொய்யாமொழியா? என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளது. இந்தவிவகாரம் திமுக தலைமைக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY