இலங்கையில் கடந்த அக்டோபர் 26-ம் தேதி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவி நீக்கம் செய்த அதிபர் சிறிசேனா, புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்சவை நியமித்தார். நாடாளுமன்றத்தையும் தற்காலிகமாக முடக்கினார். சர்வதேச நாடுகளின் நிர்பந்தம் காரணமாக வரும் 14-ம் தேதி நாடாளுமன்றம் கூடும் என்று அதிபர் மாளிகை அறிவித்துள்ளது. 225 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க 113 பேர் ஆதரவு தேவை. இப்போதைய நிலையில் மஹிந்த ராஜபக்வுக்கு பெரும்பான்மை பலம் இல்லாததால் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாயின.

இதனை அதிபர் சிறிசேனாவும் பிரதமர் ராஜபக்சவும் மறுத்தனர்.  ராஜபக்சே, ‘‘எங்கள் அணிக்கு 113 உறுப் பினர்களின் ஆதரவு உள்ளது என்கிறார்.

15 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு ரணிலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. கூட்டமைப்பின் எம்.பி.க்களை இழுக்க ராஜபக்ச தரப்பு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், கூட்டமைப்பின் எம்.பி.க்கள் அதிபர் சிறிசேனாவை நேற்று சந்தித்துப் பேசினர்.  அப்போது நாடாளுமன்ற வாக்கெடுப்பின்போது நடு நிலை வகிக்குமாறு அதிபர் சிறிசேனா வலியுறுத்தியதாகவும் அதனை கூட் டமைப்பு ஏற்க மறுத்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் அதிபர் சிறிசேனாவுக்கு எதிராக ரணிலின் ஆதரவாளர்கள் கொழும்பில் நேற்று பிரம்மாண்ட பேரணி நடத்தினர். கொழும்பு காலி முகத் திடலில் இருந்து புறப்பட்ட பேரணி சுதந்திர சதுக்கத்தில் நிறைவடைந்தது. அலரி மாளிகை வழியாக பேரணி சென்ற போது ரணில் வெளியே வந்து கையசைத்தார். ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் கொழும்பில் போக்குவரத்து ஸ்தம்பித்து, பதற்றமான சூழ்நிலை உருவானது.

LEAVE A REPLY