சமயபுரம் கோயிலில் ஒரே வரிசையில் தரிசனம் உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு

385
Spread the love

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இலவச தரிசனம் கட்டண தரிசனம் வரிசை என பாகுபாடு பார்க்காமல் ஒரே வரிசையில் நின்று சாமியை தரிசிக்க அனுமதிக்க கோரிய வழக்கில் இந்து சமய அறநிலையதுறை ஆணையர், செயலர் ஆகியோர் பதிலளிக்க ஐகோர்ட் மதுரைக்கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
திருச்சியை சேர்ந்த ஓய்வு பெற்ற விஞ்ஞானி சுப்பிரமணியன் உயர்நீதிமன்ற மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ளது. இந்த கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு மூன்று வகையான தரிசன முறைகளை கடைப்பிடிக்கின்றனர். அதாவது ரூ.250, ரூ.100, ரூ.25 ஆகிய கட்டணங்களில் தரிசனம் மற்றும் இலவச தரிசன வரிசைகளில் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். கட்டண தரிசனம் வரிசையில் வருபவர்களுக்கும் அம்மன் கருவறை அருகே வரை சென்று அமர வைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டு சாமி தரிசனம் கிடைக்க செய்யப்படுகிறது.
இலவச தரிசன வரிசையில் ஏழை பக்தர்கள் பொது வரிசையில் குறிப்பிட்ட தூரத்திற்கு முன்னால் நின்று அம்மனை ஒரு நிமிடத்திற்குள் தரிசனம் செய்து உடனே அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
இவ்வாறு சாமி தரிசனத்தில் பாகுபாடு பார்ப்பதும் ஒரு வகையில் தீண்டாமைக்கு இணையானது. எனவே கட்டண தரிசனம்,இலவச தரிசனம் என பாகுபாடு பார்க்காமல் ஒரே வரிசையில் அர்த்த மண்டபம் மற்றும் மூலஸ்தானத்தில் இருந்து ஒரே தூரத்தில் தரிசிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனு இன்று நீதிபதிகள் ராஜா, கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது, அப்போது இது குறித்து இந்து சமய அறநிலையதுறை ஆணையர்,செயலர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒரு வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.

LEAVE A REPLY