இலங்கையின் யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னைக்கு மீண்டும் விமானங்களை இயக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. இதன்மூலம் இலங்கையின் சுற்றுலாத்துறை வளர்ச்சி பெறுவதுடன், நலிவடைந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் உதவியாக இருக்கும். இலங்கைக்கு அந்நிய செலாவணியை ஈட்டித் தரும் முக்கிய ஆதாரமாக சுற்றுலாத்துறை விளங்குகிறது. எனினும், 2020 ம் ஆண்டில் கொரோனா தொற்று பரவி, சுற்றுலாத் துறையை கடுமையாக முடக்கியது. அத்துடன், இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கான முக்கிய காரணங்களில் இதுவும் ஒன்று. தற்போது யாழ்ப்பாணத்தின் பலாலியில் இருந்து இந்தியாவுக்கான விமானங்கள் விரைவில் இயக்கப்படும், அநேகமாக டிசம்பர் 12ம் தேதிக்குள் விமான சேவை தொடங்கப்படும் என விமான போக்குவரத்து துறை அமைச்சர் நிமல் சிறிபாலா டி சில்வா தெரிவித்தார். ஓடுபாதையை விரிவாக்கம் செய்யும் பணிகள் செய்யவேண்டியிருப்பதாகவும், தற்போதுள்ள ஓடுபாதையில் 75 இருக்கை கொண்ட விமானங்களை மட்டுமே கையாள முடியும் என்றும் அவர் கூறினார். இந்த விமான நிலையம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் என 2019ல் பெயர் சூட்டப்பட்டது. முதல் சர்வதேச விமானம் சென்னையில் இருந்து வந்து தரையிறங்கியது. 2019ல் இந்தியா மற்றும் இலங்கை இணைந்து இந்த விமான நிலையத்தை மறுசீரமைப்பு செய்தது. முன்னதாக, இந்தியாவின் அலையன்ஸ் நிறுவனம், சென்னையில் இருந்து பலாலிக்கு வாரந்தோறும் மூன்று விமானங்களை இயக்கியது. 2019 நவம்பரில் இலங்கையின் ஆட்சிமாற்றத்திற்குப் பின்னர், விமான நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.