பந்தலுக்கே வந்தார் கலெக்டர் : கடைசி நேர முயற்சியும் தோல்வி

539
Spread the love

கடந்த சட்டசபை தேர்தலி்ல் அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு செந்தில்பாலாஜி வெற்றி பெற்றார். தற்போது அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். அந்த தேர்தலின்போது தொகுதி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத நிலை உள்ளது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ என்ற காரணம் கூறி தமிழக அரசு தொடர்ந்து அரவக்குறிச்சியை புறக்கணிப்பதாக கூறி முன்னாள் அமைச்சரும் எம்எல்ஏவுமான செந்தில் பாலாஜி நாளை க.பரமத்தியில் உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறார்.

நாளை துவங்கி 3 இடங்களில் இவ்வாறு போராட்டம் நடத்துகிறார். தொகுதி பொதுமக்கள் கலந்து கொள்ளும் இந்த போராட்டத்திற்கு அனுமதி வழங்க 3 முறை காவல்துறை மறுத்தது. தொடர்ந்து செந்தில்பாலாஜி மதுரை மற்றும் சென்னை உயர்நீதி மன்றங்களை அணுகி அனுமதி பெற்றார். நாளை உண்ணாவிரதம் நடைபெறவுள்ள நிலையில் இன்று மாலை 3 மணியளவில் கரூர் மாவட்டக் கலெக்டர் அன்பழகன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் க. பரமத்தி கடைவீதி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள உண்ணாவிரத பந்தலுக்கு வந்தனர். அங்கும் இங்கும் சென்ற அவர்கள் சுமார் அரைமணி நேரம் பந்தல் உள்ள இடத்தை பார்வையிட்டு விட்டு சென்றனர். கலெக்டர் நேரடியாக வந்து பார்வையிட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகள் கூறுகையில்: செந்தில்பாலாஜியின் உண்ணாவிரதத்திற்கு ஏற்கனவே போலீசார் 3 முறை பல்வேறு காரணங்களை கூறி அனுமதி மறுத்தனர். தற்போது பந்தல் அமைக்கப்பட்டுள்ள இடம் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ளது என்ற காரணம் காட்டி மறுப்பு தெரிவிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பான நோட்டீசை ரெடி செய்து விிட்டு கலெக்டர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும் வந்து பார்வையிட்டனர். பின்னர் நெடுஞ்சாலைத்துறை ஆட்சேபம் தெரிவிப்பதால் உண்ணாவிரத போராட்டத்திற்கு மறுப்பு என்றுபோலீஸ் மூலம் நோட்டீஸ் கொடுக்கவும் முடிவு செய்தனர். ஆனால் நீதிமன்றம் அளித்துள்ள விதிமுறைகளுக்குட்பட்டு பந்தல் அமைக்கப்பட்டிருந்ததால் என்ன செய்வது என்று புரியாமல் அதிகாரிகள் திரும்பி சென்று விட்டனர் என்கின்றனர். கடைசி நேர முயற்சியும் தோல்வியில் முடிந்ததால் நாளை உண்ணாவிரத போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்றே கருதப்படுகிறது.

LEAVE A REPLY