ரோகித் நீக்கத்துக்கு ரவிசாஸ்திரி காரணம்

407
Spread the love

மேற்கிந்திய தீவுகள் அணிகளுடனான கிரிக்கெட் தொடருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய அணி குறித்து பலதரப்பிலும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ரோகித் சர்மா தேர்வு செய்யப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சச்சின் டெண்டுல்கரும் இது குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார்.ஹர்பஜன்சிங்கும் இது குறித்து கவலை தெரிவித்துள்ளார். ரோகித் சர்மா ஒருநாள் போட்டி சர்வதேச தர வரிசை பட்டியலில் முதல் முறையாக 2ம் இடத்தை பெற்றிருக்கிறார். அவரை டெஸ்ட் அணிக்கு தேர்வு செய்யாததை என்னால் ஜீரணிக்க முடியவில்லை என்று ஹர்பஜன்சிங் கவலை தெரிவித்துள்ளார்.
பொதுவாக பார்ம்மில் இல்லாத வீரர்களுக்கு ஓய்வளிப்பது வழக்கம். ஆனால் தற்போது ரோகித் சர்மா நல்ல பார்ம்மில் இருக்கிறார். இருப்பினும் அவர் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக ரசிகர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். இங்கிலாந்து தொடரில் ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவரால்தான் சில போட்டிகளில் வெற்றியும் கிடைத்தது. ஆனால் அந்த தொடரில் அவருக்கு டெஸ்ட் அணியில் இடம் தரவில்லை. அந்த தொடரில் 5 டெஸ்ட் போட்டிகளில் ஒன்றில் மட்டுமே இந்தியா வெற்றி பெற்றது. மற்ற 4 போட்டிகளில் ஒன்றைகூட டிரா செய்யக் கூட முடியவில்லை. அனைத்திலும் இந்திய அணி தோல்வியடைந்தது. இந்நிலையில் ஆசிய கோப்பை தொடரில் கேப்டன் பொறுப்பை ஏற்ற ரோகித்சர்மா தலைமையிலான இந்திய அணி தான் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்று கோப்பையை கைப்பற்றியது. இருப்பினும் மேற்கிந்திய அணியுடனான டெஸ்ட் அணியில் தற்போது ரோகித் சர்மாவுக்கு இடமளிக்கப்படவில்லை. சுழற்சி முறையில் வீரர்களுக்கு ஓய்வளிக்கப்படுவதாக கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் சப்பைகட்டு கட்டினாலும், இதில் விவகாரம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால்தான் சில நாட்களுக்கு முன் கேப்டன் பொறுப்பை ஏற்கத்தயார் என்று ரோகித் சர்மா பேட்டியளித்தார். மேலும் ரோகித் சர்மாவுக்கும், ரவி சாஸ்திரிக்கும் உரசல் இருப்பதாகவும், அதன்விளைவாகவே ரோகித் புறக்கணிக்கப்படுவதாகவும் தகவல் கசிகிறது. இதனால் அணித் தேர்வில் அரசியல் இருக்கிறதோ என்ற சந்தேகமும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இதுபோன்ற சர்ச்சைகளுக்கு இடமளிக்காமல் அணித் தேர்வு இருந்தால்தான் இந்திய கிரிக்கெட்டுக்கு சிறந்த எதிர்காலம் அமையும் என்பது கிரிக்கெட் ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

LEAVE A REPLY