திருச்சி மாவட்டம் துறையூர் அருகேயுள்ளது மருதை மலை கிராமம். இங்கு மலைவாழ் மக்களின் குழந்தைகள் படிக்க அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு பணியாற்றும் ஆசிரியை ஒருவர் கடந்த திங்கட்கிழமை பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக மருதையில் இருந்து செம்புலிச்சான்பட்டி கிராமத்திற்கு புறப்பட்டார். அந்த பகுதிக்கு பஸ் வசதி இல்லாததால் 2 கி.மீ. தூரம்  நடந்துதான் செல்ல வேண்டும். அடர்ந்த வனப்பகுதி பாதையில் ஆசிரியை நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவன் ஆசிரியை வழிமறித்தான். அவரிடம் இருந்து பணத்தைப் பறித்துக் கொண்டதோடு, ஆசிரியையை பலாத்காரம் செய்ய முயன்றான்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியை அங்கிருந்து தப்பி மருதமலை கிராமத்துக்கே சென்று பொதுமக்களிடம் நடந்ததை கூறினார். உடனடியாக கிராம மக்கள் ஒன்று திரண்டு சென்று இது பற்றி துறையூர் போலீசார் மற்றும் ஆதிதிராவிட பழங்குடியினர் திட்ட அலுவலர் ரெங்கராஜ் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதிகாரி ரெங்கராஜும் மருதை கிராமத்திற்கு சென்று நேரடியாக விசாரணை நடத்தினார். அப்போது இருதரப்பினரையும் சமாதானம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது.
இதையறிந்த மருதை கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு ஆதிதிராவிட பழங்குடியினர் திட்ட அலுவலர் ரெங்கராஜுவிடம் நடவடிக்கை எடுத்தது பற்றி கேட்டனர். அதற்கு அவர் துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சம்பவம் பற்றி நீங்கள் துறையூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்குமாறும் கூறியுள்ளார். இதனால் மருதை கிராம மக்கள் துறையூர் போலீஸ் நிலையத்தில் திரண்டு ஆசிரியையிடம் பலாத்கார முயற்சியில் ஈடுபட்ட சிறுவன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், அந்த பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பள்ளி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் கேட்டுக் கொண்டனர். இச்சம்பவம் துறையூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

LEAVE A REPLY