Skip to content

குஜராத்திலிருந்து 2ஆயிரத்து 640 டன் உரங்கள் தஞ்சை மாவட்டத்துக்கு வந்தது..

தஞ்சாவூர்: டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் குறுவை சாகுபடிக்காக குஜராத் மாநிலத்திலிருந்து 2 ஆயிரத்து 640 டன் உரங்கள் தஞ்சாவூர் மாவட்டத்துக்கு வந்தது.

டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூரில் 1.97 லட்சம் ஏக்கரிலும், திருவாரூரில் 1.93 லட்சம் ஏக்கரிலும், நாகையில் 75 ஆயிரத்து 250 ஏக்கரிலும், மயிலாடுதுறையில் 99 ஆயிரத்து 253 ஏக்கரிலும் என மொத்தம் 5.66 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்படுகிறது. இதற்காக தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், தனியார் சில்லரை உர விற்பனை நிலையங்களில் குறுவை பருவத்துக்கு தேவையான உரங்களான யூரியா 7 ஆயிரத்து 177 டன்னும், டிஏபி 1,637 டன்னும், பொட்டாஷ் 1,465 டன்னும், காம்ப்ளக்ஸ் 3 ஆயிரத்து 295 டன்னும், சூப்பர் பாஸ்பேட் 969 டன்னும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

மேலும் விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி உரம் கிடைக்கச் செய்வதற்காக குஜராத் மாநிலம் சூரத் நகரிலுள்ள மத்திய அரசு உர நிறுவனமான கிரிப்கோ உர உற்பத்தி ஆலையிலிருந்து சரக்கு ரயில் மூலம் கிரிப்கோ யூரியா உரம் தஞ்சாவூர், கும்பகோணம் ரயில் நிலையங்களுக்கு தலா 1,320 டன் என மொத்தம் 2 ஆயிரத்து 640 டன் வந்தது. இந்த உர மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர் ஆகிய மாவட்டங்களிலுள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், தனியார் சில்லரை உர விற்பனை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இத்தகவலை வேளாண் உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) செல்வராஜ் தெரிவித்தார்.

error: Content is protected !!