72 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி…

81
Spread the love

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் காயங்குளம் அடுத்த ராமபுரத்தை சேர்ந்தவர் சுரேந்திரன். இவரது மனைவி சுதர்மா (72). இவர்களது ஒரே மகன் சுர்ஜித் (35). இவர் துபாயில் வேலை பார்த்து வந்தார். மகனுக்கு திருமணம் செய்து வைத்து பேரக்குழந்தைகளோடு காலத்தை கழிக்க பெற்றோர் ஆசைப்பட்டனர். ஆனால் சுர்ஜித் உடல் நலக்குறைவால் திடீரென இறந்துவிட்டார். இதை பெற்றோரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அழுது புலம்பியுள்ளனர். ஒரு நாள் நமக்கு பெயர் சொல்ல ஒரு பிள்ளை வேண்டும். ஆதலால் நாம் மீண்டும் ஒரு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று சுதர்மா கணவரிடம் கூறினார். ஏதோ விரக்தியில் கூறுகிறார் என்று கணவர் சமாதானம் செய்தார். ஆனால் குழந்தை பெற்றுக்கொள்வதில் மூதாட்டி மிக உறுதியாக இருந்தார்.

இதுகுறித்து ஆலப்புழா அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று தனது விருப்பத்தை தெரிவித்தார். ஆனால் டாக்டர்கள் இந்த வயதில் குழந்தை பெற வாய்ப்பு இல்லை. இதற்கான முயற்சி எடுத்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று கடுமையாக எச்சரித்து அனுப்பினர். இதை அறிந்த உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் குழந்தை வேண்டும் என்றால் தத்தெடுத்து வளர்க்கலாம் என்று கூறினர். அதை ஏற்றுக் கொள்ளாமல் தொடர்ந்து ஆஸ்பத்திரிக்கு சென்று கண்ணீர்மல்க தனது ஆசையை கூறினார். இதனையடுத்து மனம் இறங்கிய டாக்டர்கள் கடந்த 32 வாரங்களுக்கு முன்பு டெஸ்ட் டியூப் முறையில் மூதாட்டி சுதர்மாவுக்கு கருத்தரிக்க செய்தனர். இதற்கு அவரது கணவர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சுதர்மாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. குழந்தை பிறக்க நாள் இருந்தும் அவரது உடல் ஒத்துழைக்காததால் ஆபரேசன் மூலம் குழந்தையை எடுக்க முடிவு செய்தனர்.  ஆபரேசனில் பெண் குழந்தை பிறந்தது. குழந்தை 1 கிலோ 100 கிராம் எடை மட்டுமே இருந்தது. மயக்கம் தெளிந்து குழந்தையை பார்த்த சுதர்மா குழந்தையை கட்டி அணைத்துக்கொண்டார். பின்னர் குழந்தையை நன்றாக பார்த்துக் கொள்ளுமாறு டாக்டர்கள் ஆலோசனை வழங்கி சுதர்மாவை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். 72 வயதில் மூதாட்டி புதுவாழ்வு கிடைத்த மகிழ்ச்சியில் ஆஸ்பத்திரியை கோவில் என நினைத்து கும்பிட்டு அங்கிருந்து புறப்பட்டார். 

LEAVE A REPLY