தலைமைச் செயலகத்தில் ஜூனியர் அசிஸ்டெண்டாக வாழ்க்கையை ஆரம்பித்தவர் விவேக்..

1449
Spread the love
தமிழ்த் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக விளங்கிய  விவேக் (59)   1961-ஆம் ஆண்டு கோவில் பட்டியில் பிறந்தார்.  அவரது முழு பெயர் விவேகானந்தன். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் எம் காம் படித்த நடிகர் விவேக், அங்கு சிறிது காலம் டெலிபோன் ஆபரேட்டராக பணிபுரிந்துவந்தார்.  1986 அரசு தேர்வில் தேர்ச்சி பெற்று தலைமைச் செயலகத்தில் ஜூனியர் அசிஸ்டெண்ட்டாக வேலைக்கு சேர்ந்தார். 1992 ஆம் ஆண்டு வரை தலைமை செயலக ஊழியராக பணியாற்றினார். தலைமைச் செயலகத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த போதே விவேகானந்தனை விவேக் என மாற்றிய இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் 1987-களில்  சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டார். 1987 ஆம் ஆண்டு, ‘மனதில் உறுதிவேண்டும்’ என்ற திரைப்படத்தின் மூலம், தமிழ் சினிமா துறையில் கால்பதித்த விவேக், 1989 ஆம் ஆண்டு வெளிவந்த ‘புது புது அர்த்தங்கள்’ திரைப்படத்தில், இவர் பேசிய ‘இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்’ என்ற வசனம் இவரைப் பிரபலப்படுத்தியது. தொடர்ந்து நகைச்சுவை நடிகர், குணச்சித்திர நடிகர் எனப் பன்முகத்தன்மை கொண்டவராக தன்னை தயார் செய்து கொண்ட விவேக். சிறந்த மேடைப் பேச்சாளர். விவேக் நூற்றுக்கணக்கான படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து இருக்கிறார். ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்கள் படங்களிலும் நடித்து இருக்கிறார்.
 
திரைப்படங்களில் சீர்திருத்த கருத்துகளையும் பரப்பினார். இதனால் அவரை சின்ன கலைவாணர் என்று ரசிகர்கள் அழைத்தனர். பத்மஸ்ரீ விருது பெற்றுள்ளார். சுற்று சூழல் பாதுகாப்பு, மரம் வளர்ப்பு போன்ற சமூக சேவை பணிகளில் ஆர்வம் காட்டினார். மறைந்த ஜனாதிபதி அப்துல்கலாமின் கனவை நிறைவேற்றும் வகையில் கிரீன் கலாம் அமைப்பு மூலம் 1 கோடி மரக்கன்றுகள் நடுவதை இலக்காக வைத்து செயல்பட்டு வந்தார். இதுவரை பள்ளிகள், கல்லூரிகள், கிராமங்கள். சாலையோரங்களில் 33 லட்சத்து 23 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு இருக்கிறார். 2009-ல் பத்ம ஸ்ரீ விருது விவேக்கிற்கு வழங்கப்பட்டது.  நான் தான் பாலா, வெள்ளைப் பூக்கள் உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாகவும் விவேக் நடித்துள்ளார்.

நடிகர் விவேக்கிற்கு அருள்செல்வி என்கிற மனைவியும்  அமிர்தாநந்தினி, தேஜஸ்வனி என்ற இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். 3வதாக இருந்த மகன் பிரசன்ன குமார் (13) மூளை காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டு  2015ம் அக்டோபரில் இறந்தார் என்பது குறிப்பிடதக்கது. 

LEAVE A REPLY