நடிகர் சூரி வழக்கில் முன் ஜாமீன் கேட்டு ஏடிஜிபி குடவாலா மனு..

354
Spread the love

கடந்த 2015-ம் ஆண்டு சினிமா தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் தயாரிப்பில் “வீர தீர சூரன்” என்கிற திரைப்படத்தில் ஹீரோவாக விஷ்ணு விஷாலும், காமடியனாக சூரியும் நடித்தனர். இந்த படத்திற்கு சூரிக்கு சம்பளமாக 40 லட்சம் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.  இறுதியில்  இவீர தீர சூரன் படத்திற்கு சம்பளம் தரவில்லை. அதற்கு பதிலாக சிறுசேரியில் ஒரு இடத்தை காட்டிய அன்புவேல் ராஜன் மற்றும் நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையுமான ஒய்வு பெற்ற ஏடிஜிபி ரமேஷ் குடவாலாவும் நடிகர் சூரியிடம் பல்வேறு தவணைகளாக 3.10 கோடியை பெற்று நிலத்தை விற்பனை செய்துள்ளனர். நிலம் வாங்கும்போதே பல பிரச்சினைகள் இருப்பது நடிகர் சூரிக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து நிலத்தை திருப்பி வாங்கி கொள்வதாகவும் பணத்தை திருப்பி தருதாகவும் ஒப்பந்தம் ஒன்றை சூரியிடம் ரமேஷ் குடவாலா பதிவு செய்ததாக தெரிகிறது. ஆனால் சூரியிடம் வாங்கிய பணத்தில் 40 லட்ச ரூபாய் மட்டும் திருப்பி கொடுத்துள்ளார். மீதி தொகையான 2 கோடியே 70 லட்ச ரூபாயை சூரிக்கு தராமல் அலைக்கழித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அடையாறு போலீஸில் புகார் அளித்த நடிகர் சூரி எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் அடுத்தகட்டமாக போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார். அங்கும் நடவடிக்கை எடுக்கப்படாததால் சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் ஓய்வுபெற்ற டிஜிபி ரமேஷ் குடவாலா மற்றும் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் மீது வழக்கு பதிவு செய்யுமாறு கடந்த மாதம் சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவையடுத்து அடையாறு காவல் நிலையத்தில் ஓய்வுபெற்ற டிஜிபி ரமேஷ் குடவாலா, திரைப்பட தயாரிப்பாளர் அன்புவேல்ராஜன் ஆகிய இருவர் மீதும் 5 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு மாற்றப்பட்டது.

இதற்கிடையே குற்றம் சாட்டப்பட்டவர்கள் செல்வாக்கு மிக்கவர்கள் என்பதால் வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக்கோரி சூரி தரப்பில்   சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், இந்த வழக்கில் தாம் கைது செய்யப்படக்கூடும் என்ற அச்சத்தில் ஓய்வுபெற்ற டிஜிபி ரமேஷ் குடவாலா முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வர உள்ளது.

LEAVE A REPLY