அஜித்துடன் இணைந்து நடிக்க முடியல….பிரசன்னா

91
 நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து அஜித்தின் 60-வது படமாக ‘வலிமை’ உருவாகி வருகிறது. இந்தப் படத்தையும் போனி கபூரின் ஜீ ஸ்டுடியோஸ் தயாரிக்க எச்.வினோத் இயக்குகிறார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் பூஜையுடன் துவங்கிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் கட்ட படப்பிடிப்பு  முடிந்துள்ளது. இந்த படத்தில் அஜித்துடன் நடிக்கும் நடிகர், நடிகைகள் பற்றிய விவரங்களை படக்குழுவினர் அறிவிக்கவில்லை.
அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு, படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் குறித்த தகவலை வெளியிடாமல் ரகசியம் காத்து வருகிறது படக்குழு. வலிமை படம் வருகிற தீபாவளி பண்டிகைக்கு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
 
இந்தப் படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிகர் பிரசன்னா நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின. அண்மையில் ரசிகர் ஒருவர் பிரசன்னாவிடம், வலிமை படத்தில் நடிக்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த பிரசன்னா, தகவலுக்காக காத்திருக்கிறேன் என்று கூறியிருந்தார். இதை வைத்து அவர் நடிப்பது உறுதி என்று பேச தொடங்கினர்.
மேலும் பிரசன்னா, அஜித்துக்கு வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் பரவி வந்த நிலையில், வலிமை படக்குழு இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.
 
 “வலிமை படத்தில் அஜித்துடன் நான் நடிக்க வேண்டும் என்று பலரும் விரும்பி எனக்கு வாழ்த்து சொன்னீர்கள். அதற்கான பேச்சுவார்த்தை நடந்ததும் உண்மைதான். என்னுடைய திரைவாழ்க்கையில் மிகப்பெரிய அறிவிப்பாக இச்செய்தியை அறிவிக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் துரதிருஷ்ட வசமாக அந்த வாய்ப்பு எனக்கு இந்தமுறை கிடைக்கவில்லை.
 
விரைவில் தல அஜித்துடன் இணைந்து நடிப்பேன் என்று நம்புகிறேன். அஜித்துடன் நடிக்க முடியாதது எனக்கு மிகுந்த கவலையளித்தாலும் உங்களுடைய அன்பால் இதிலிருந்து மீண்டு விட்டேன்.” என்று பிரசன்னா தனது அறிக்கையில் தெரிவித்தார்.
 

LEAVE A REPLY