Spread the love

அறிஞர் அண்ணா வாடிகனுக்கு சென்றபோது போப்பாண்டவரைச் சந்திக்க 5 நிமிடம் ஒதுக்கப்பட்டது. அஹிம்சா மூர்த்தி காந்தி பிறந்த இந்திய தேசத்தின் கடைக்கோடி மாநிலமாம் தமிழ்நாட்டின் முதல்வர் நான் என்று பேச ஆரம்பித்து தமிழர்களின் சிறப்பை எடுத்துச் சொல்லி5 நிமிடத்தில் தன் பேச்சை முடித்தார் அண்ணா.

அவரது பேச்சுத் திறமையை கண்டு அசந்து போன போப்பாண்டவர், அருமையாகப் பேசுகிறீர்கள் தொடர்ந்து பேசுங்கள் என்றார். இதையடுத்து அண்ணா 55 நிமிடம் பேசினார். அண்ணாவின் பேச்சில் சொக்கிப் போன போப்பாண்டவர் உங்களுக்கு என்ன பரிசு வேண்டுமென்றார்.

என்ன கேட்டாலும் தருவீர்களா என்றார்  அண்ணா. கேளுங்கள்  என்றார் போப்பாண்டவர். போர்ச்சுகலின் கோவா ஆக்கிரமிப்பை எதிர்த்து போராடிய மோகன் ரானடே  தற்போதும்  லிஸ்பன் சிறையில் வாடுகிறார்.  நீங்கள் போர்ச்சுகலிடம் பேசி மோகன் ரானடேவை விடுதலை செய்ய உதவ வேண்டும் என்றார் அண்ணா. பின்னர் போப்பாண்டவரின் வேண்டுகோளை ஏற்று விடுதலை செய்யப்பட்ட ரானடே இந்திய தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டார். டெல்லி வந்த ரானடேவை வரவேற்க அன்றைய பிரதமர் இந்திரா காந்தி விமானநிலையத்திற்கே சென்றார். ரானடே இந்திரா காந்தியிடம், யாருக்காகப் போராடினேனோ அந்த கோவா மக்களே என்னை மறந்துவிட்ட நிலையில் தமிழகத்தில் இருந்து என் விடுதலையை வேண்டிய திரு அண்ணாதுரை எங்கே என்று கேட்டார்.

அதற்கு இந்திரா காந்தி அண்ணா மறைந்து விட்டார், அவர் கட்சியின் எம்பி நாஞ்சில் மனோகரனை அழைத்து வந்திருக்கிறேன் என்றார் இந்திரா. நாஞ்சிலாரைச் சந்தித்தபின்  நீங்கள் கோவா செல்ல ஏற்பாடு செய்திருக்கிறேன் என்றார் இந்திரா.

உடைந்து போன ரானடே, நான் முதலில் செல்ல வேண்டிய இடம் கோவா அல்ல, அண்ணாவின் சமாதி தான் என்றார். அன்னை இந்திரா, ரானடே மற்றும் நாஞ்சிலாரை உடனடியாக சென்னைக்கு அனுப்பி வைத்தார். அண்ணா சமாதிக்கு வந்த ரானடே அழுது புரண்டார் . இந்த வரலாற்றை  தமிழினம் மறந்ததும் ஒரு வரலாறு. 

LEAVE A REPLY