சென்னை முகப்பேரை சேர்ந்தவர் ஆல்வின்(35) இவரது சகோதரர் ராபின்(32). இவர்கள் இருவரும் அதே பகுதியில், ஏ.ஆர்.டி., ஜூவல்லர்ஸ் மற்றும் நிதி நிறுவனங்களை நடத்தி வந்தனர். தங்கள் நிறுவனத்தில், 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், வட்டியாக வாரம், 3,000 ரூபாய் தரப்படும் என்று, அறிவித்தனர். அதேபோல, 10,000 ரூபாய் செலுத்தினால், 12 மாதத்தில், 2.40 லட்சம் ரூபாய்க்கு நகை வாங்கிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தனர். இப்படி பல விதமான கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து, மக்களிடம் இருந்து, 100 கோடி ரூபாய் வரை வாங்கி மோசடி செய்துள்ளனர். அந்த பணத்தில், சினிமா படங்கள் எடுக்கவும் முயற்சி செய்துள்ளனர். இதுகுறித்து, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து, கடந்தாண்டு டில்லியில் பதுங்கி இருந்த ஆல்வின், ராபின் ஆகியோரை கைது செய்தனர். அதன்பின், மோசடிக்கு உடந்தையாக இருந்த, முகவர்கள் பிரியா உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். சமீபத்தில், இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த, ஆல்வின், ராபின் ஆகியோரின் சித்தப்பாவான புதுச்சேரியை சேர்ந்த ஆப்ரகாம், (45)கைது செய்யப்பட்டார். அவர் அளித்த தகவலின்படி, ஏ.ஆர்.டி., ஜுவல்லர்ஸ் மற்றும் நிதி நிறுவனங்களில், ‘மார்க்கெட்டிங்’ பிரிவு அதிகாரியாக பணியாற்றிய, ராபினின் நெருங்கிய தோழியான லீமா ரோஸ்(29), என்பவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மட்டும், 1.50 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது. முதலீட்டாளர்களிடம் இனிக்க இனிக்க பேசி, கோடிகளை பெற்று, ராபினிடம் லீமா ரோஸ் கொடுத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.