வங்கதேசத்தில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் செய்து வருகிறது. இதில் ஒரு டெஸ்ட் போட்டி நடந்தது. கடந்த 5 ஆம் தேதி சாட்டோகிராமில் தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்று ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்சில் ரஹ்மத் ஷா (102), அஸ்கர் ஆப்கான் (92) ஆட்டத்தால் 10 விக்கெட் இழப்புக்கு 342 ரன்கள் எடுத்தது. வங்கதேச வீரர் தைஜுல் இஸ்லாம் 4 விக்கெட்டை வீழ்த்தினார்.

பின்னர் தனது முதல் இன்னிங்சில் வங்கதேசத்தின் மோமினுல் ஹக் 52, மொசாடெக் ஹொசைன் 48 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற அந்த அணி 205 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ரஷித் கான் 5, முகமது நபி  3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

137 ரன்கள் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்ஸ் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 260 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 398 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் ரஷித் கானின் அபாரமான சுழலில் சிக்கி சின்னாபின்னமானது. அந்த அணி வீரர்கள் வருவதும் போவதுமாக இருந்ததால் 173 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. ரஷித் கான் 6 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து ஆப்கன் 224 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மொத்தம் 11 விக்கெட் எடுத்த ஆப்கன் கேப்டன் ரஷித்கான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

LEAVE A REPLY