7 ஆண்டுக்குப்பிறகு அதிமுக மாஜிக்கள் மீது ஊழல் வழக்கு!

153
Spread the love

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கல்வி மாவட்டத்தில் 2012-ம் ஆண்டு 13 பள்ளி பாதுகாவலர்கள், 25 துப்புரவு பணியாளர்கள் நியமன அறிவிப்பு வெளியானது. துப்புரவு பணிக்கு 116 பேர் விண்ணப்பித்தனர். இதில் 65 பேர் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர்.

43 பேர் பள்ளி பாதுகாவலர் பணிக்கு விண்ணப்பித்ததில் 30 பேர் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர். இவர்களில் 8 பேரும், 20 துப்புரவு ஊழியர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்நிலையில் நேர்காணலில் பங்கேற்று பணி கிடைக்காத கணேசன் என்பவர் கடந்த 2012 ஆம் ஆண்டில் ஐகோர்ட் கிளையில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில் எம்.எல்.ஏ.க்கள், கல்வி அதிகாரிகள் சிபாரிசு அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டு முறைகேடு நடந்ததால் நியமனங்களை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கை ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு போலீசார் விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டது. போலீசார் விசாரணை நடத்தி தற்போது வழக்கு பதிவு செய்துள்ளனர். அதில்  2011-16ம் ஆண்டு வரை எம்.எல்.ஏ.க்களாக இருந்த முத்துராமலிங்கம் (திருமங்கலம்), கதிரவன் (உசிலம்பட்டி), ஏ.கே.போஸ் (மதுரை வடக்கு), தற்போதைய கல்வித் துறை இணை இயக்குநர் நாகராஜ முருகன், முன்னாள் கல்வி அதிகாரிகள் சந்தானமூர்த்தி, ராஜ ராஜேஸ்வரி, கண்ணப்பன், மணி, தேவராஜ் ஆகிய 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதில் ஏ.கே.போஸ், அதிகாரிகள் மணி, தேவராஜ் ஆகியோர் இறந்து விட்டனர். ஊழல் வழக்கில் ஆளுங்கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், கல்வி அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

LEAVE A REPLY