Spread the love

லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. இந்நிலையில் காங்கிரஸ் காரிய கமிட்டி ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடந்தது. இதில் தோல்விக்கான காரணங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

4 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பொறுமையிழந்த ப்ரியங்கா காந்தி, இந்த தோல்விக்கு காரணமானவர்கள் அனைவரும் இதே இடத்தில் தான் அமர்ந்து கொண்டிருக்கின்றோம். என் அண்ணனை மட்டும் தனியாக போராட விட்டுவிட்டு நீங்கள் எல்லாம் எங்கே சென்றீர்கள் என்று சீறியதாக கூறப்படுகிறது.

இந்த கூட்டத்தில் வெகு நேரம் கோபத்துடன், அதே நேரம் அமைதியாக இருந்த ப்ரியங்கா, ராகுலை யாரும் ஆதரிக்கவில்லை. ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக பேசிய போதும், மோடி மீது குற்றச்சாற்று வைத்த போதும், யாரும் ராகுலுடன் அந்த் குற்றச்சாட்டுகளை ஆமோதித்து தங்களின் கருத்துகளை முன் வைக்கவில்லை என்று விளாசியிருக்கிறார்.

முன்னாள் மத்திய அமைச்சர்கள் தங்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததால் தான் இது போன்ற பிரச்சனை ஏற்பட்டுள்ளது. தாங்கள் நிற்க வேண்டிய இடத்தில் தங்களின் மகன்களுக்கு டிக்கெட் வாங்கிக் கொடுத்த ப.சிதம்பரம், மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் மற்றும் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ஆகியோரை ராகுல் தனது பேச்சில் குற்றம்சாட்டினார்.

தனது மகனுக்கு சீட் தரவில்லை என்றால் கட்சியில் இருந்து விலகுவேன் என்று ப.சிதம்பரம் மிரட்டினார் என்று கூறிய ராகுல் காந்தி, மத்தியப் பிரதேச முதல்வர் கமல் நாத்தோ, என் மகனுக்கு தொகுதியில் வாய்ப்பில்லை என்றால் நான் எப்படி ஒரு முதல்வராக நிலைத்து நிற்க முடியும் என்றார் என்னிடம். ராஜஸ்தான் முதல்வரோ, மகனுடன் இணைந்து பிரச்சாரத்திற்கு சென்றுவிட்டார். மோடியின் ஊழலுக்கு எதிராகவும், ரபேல் பேர ஒப்பந்த ஊழலுக்கு எதிராகவும் எத்தனை பேர் மிகவும் முறையாக பிரச்சாரம் நடத்தி, பிரச்சனையை மக்கள் மத்தியில் யாரெல்லாம் கொண்டு போய் சேர்த்தீர்கள் என்றும் ராகுல் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

LEAVE A REPLY