Skip to content

வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்…

  • by Authour

மதுரை மேலமடை அப்பல்லோ சந்திப்பில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள வீரமங்கை வேலு நாச்சியார் மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று(டிச.7) திறந்து வைத்தார். மதுரை அண்ணாநகர், மாட்டுத்தாவணி, ஆவின் பாலகம், பாண்டி கோயில் ஆகிய நான்கு பகுதிகளை இணைக்கும் விதமாக மேலமடை அப்பல்லோ சந்திப்பு உள்ளது. இந்தப் பகுதி மருத்துவமனைகள், திரையரங்குகள், தனியார் நிறுவனங்கள் அதிகம் உள்ள பகுதி என்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதன் காரணமாக, அந்த வழியாகச் செல்லும் அரசு அலுவலர்கள், பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகள், பொதுமக்கள் குறித்த நேரத்துக்குள் செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வந்தனர்.

மேலும், சாலை குறுகியதாக இருந்ததால் அடிக்கடி நிகழ்ந்த விபத்துகளால் உயிரிழப்புகளும் ஏற்பட்டன. எனவே, மேலமடை அப்பல்லோ சந்திப்பில் உயர்நிலைப் பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்ற தமிழக அரசு மதுரை-சிவகங்கை சாலையில் ஆவின் பாலகம் சந்திப்பு முதல் மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை சந்திப்பு வரை உயர்நிலை பாலம் அமைக்க ரூ.150 கோடி ஒதுக்கியது.

கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதி உயர்நிலைப் பாலம் அமைப்பதற்கான பணிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 1,100 மீட்டர் தொலைவுக்கு 28 தூண்களைக் கொண்ட இந்த பாலப் பணிகள் தற்போது நிறைவு பெற்றுள்ளது. இந்த பாலத்தை இன்று பொதுமக்கள் பயன்பாட்டுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்து வைத்தார்.

error: Content is protected !!