கொரோனா அச்சம்… வயதான தம்பதி தூக்கிட்டு தற்கொலை….

90
Spread the love
சென்னை மதுரவாயல், வேல் நகர், 1-வது மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் அர்ஜூனன் (70). இவருடைய மனைவி அஞ்சலை (60). இவர்களுக்கு பிள்ளைகள் இல்லை என கூறப்படுகிறது. வயதான காலத்தில் கணவன்-மனைவி இருவரும் வீட்டில் தனிமையில் வசித்து வந்தனர்.  நேற்று இவர்களுடைய உறவினர் ஒருவர், இவர்களுக்கு உணவு கொடுப்பதற்காக வீட்டுக்கு வந்தார். கதவு உள்புறமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்ததால் ஜன்னல் வழியாக உள்ளே எட்டிப்பார்த்தார். அப்போது வீட்டின் சமையல் அறையில் அர்ஜூனன்-அஞ்சலை இருவரும் ஒரே கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
 
இதுகுறித்து தகவல் அறிந்துவந்த மதுரவாயல் போலீசார் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து மேலும் விசாரித்தார்.  அதில், கடந்த 3 நாட்களாக அஞ்சலை உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் கடந்த 3 நாட்களாக இருவருக்கும் அவர்களது உறவினரே உணவு சமைத்து கொடுத்து வந்தார்.
 
மனைவிக்கு உடல் நலக்குறைவு என்பதால் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருக்குமோ? என்ற பயத்திலும், அதனை காரணம் காட்டி தங்கள் இருவரையும் பிரித்து விடுவார்களோ? என்ற அச்சத்திலும் இருவரும் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். எனினும் வயதான காலத்தில் தங்களை கவனித்துக்கொள்ள பிள்ளைகள் யாரும் இல்லையே? என்ற விரக்தியில் அவர்கள் தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

LEAVE A REPLY