இலங்கையுடனான டி20 தொடரை வென்றது இந்தியா

133

இந்தியா வந்த இலங்கை அணி மூன்று ‘டுவென்டி-20’ போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. முதல் போட்டி மழையால் ரத்தானது. 2வது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. 3வது மற்றும் கடைசி போட்டி நேற்று புனேயில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற இலங்கை அணி கேப்டன் மலிங்கா பவுலிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் கீப்பர் ரிஷாப் பன்ட், குல்தீப், ஷிவம் துபேக்குப்பதில் சாம்சன், சகால், மணிஷ் பாண்டே சேர்க்கப்பட்டனர். இந்திய அணிக்கு  ராகுல், ஷிகர் தவான் ஜோடி சிறப்பான துவக்கம் தந்தது. எதிரணி பந்துவீச்சை எளிதாக சமாளித்த இருவரும் அரை சதம் கடந்தனர். சந்தகன் ‘சுழலில்’ தவான் (52) ஆட்டமிழந்தார். ராகுல் 54 ரன்கள் எடுத்தார். சாம்சன் (6), ஸ்ரேயாஸ் ஐயர் (4) ஒற்றை இலக்கில் திரும்பினர். விராத் கோஹ்லி (26) ரன் அவுட்டானார். வாஷிங்டன் சுந்தர் டக் அவுட்டாகி அதிர்ச்சி தந்தார். கடைசி கட்டத்தில் ஷர்துல் தாகூர் விளாச, இந்திய அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 201 ரன்கள் எடுத்தது. மணிஷ் பாண்டே (31), ஷர்துல் தாகூர் (22) அவுட்டாகாமல் இருந்தனர். கடின இலக்கை தொட வேண்டிய கட்டாயத்தில் களம் இறங்கிய இலங்கை அணிக்கு குணதிலகா (1), பெர்னாண்டோ (9), குசல் பெரேரா (7) ஏமாற்றம் அளித்தனர். மாத்யூஸ் 31 ரன்கள் எடுத்தார். தனஞ்செயா (57) அரை சதம் கடந்தார். தாகூர் பந்தில் ஷானகா (9) சிக்கினார். சுந்தர் ‘சுழலில்’ சந்தகன் (1) வெளியேறினார். இலங்கை அணி 15.5 ஓவரில் 123 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி வீழ்ந்தது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக சைனி 3 விக்கெட் வீழ்த்தினார். இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை வென்று கோப்பை கைப்பற்றியது. ஆட்ட நாயகன் விருது ஷர்துல் தாகூருக்கும், தொடர் நாயகன் விருது, நவ்தீப் சைனிக்கு வழங்கப்பட்டது.

LEAVE A REPLY