டாக்டர் கொலை வழக்கில் …. 7 பேருக்கு தூக்கு….

118
Spread the love

2013ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி தமிழ்நாட்டையே உலுக்கிய சம்பவம் அரங்கேறியது. சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் பிரபல நரம்பியல் மருத்துவரான சுப்பையா கூலிப்படையினரால் சரமாரியாக வெட்டப்பட்டார். தலை, கழுத்து, கை, என்று 20க்கும் மேற்பட்ட வெட்டு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இதுதொடர்பாக சுப்பையாவின் உறவினர் ஏ.ஏ.மோகன் புகார் அளித்தார்.

இதையடுத்து வழக்குப்பதிவு செய்த அபிராமபுரம் காவல் துறையினர், ஆசிரியர்கள் பொன்னுசாமி, மேரி புஷ்பம், வழக்கறிஞர் பாசில், வில்லியம், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், என்ஜினீயர் போரிஸ், கூலிப்படையைச் சேர்ந்த கபடி வீரர் ஏசுராஜன், முருகன், செல்வபிரகாஷ், ஐய்யப்பன் ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டனர். வழக்கு நடைபெற்ற காலத்தில் ஐயப்பன் குற்றத்தை ஒப்புக்கொண்டார். கடந்த 6 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி கொரோனா காலத்திலும் நேரடி விசாரணையாக தினம்தோறும் நடைபெற்றது.

அரசு தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.விஜயராஜ் ஆஜரானார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் ஆதரவாக மூத்த வழக்கறிஞர்கள் கோபாலகிருஷ்ண லக்ஸ்மனராஜு, ரகுநாதன், சந்திரசேகர் உள்ளிட்டோர் ஆஜரானார்கள். அரசு தரப்பில் 57 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 173 ஆவணங்கள், 42 சான்று பொருட்கள் குறியீடு செய்யப்பட்டன. எதிரிகள் தரப்பில் 3 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 7 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டன.

பிரபல மருத்துவர் வெட்டிப் படுகொலை… குற்றவாளிகள் 7 பேருக்கு தூக்கு; இருவருக்கு ஆயுள் - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

சாட்சி விசாரணை மற்றும் இறுதி வாதங்கள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பினை ஜூலை 28ஆம் தேதிக்கு சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி ஒத்திவைத்து ஆகஸ்ட் 2ஆம் தேதி அறிவிப்பதாக தெரிவித்தார். தீர்ப்பின்போது குற்றஞ்சாட்டப்பட்ட மேரிபுஷ்பம், பொன்னுசாமி ஆகியோர் உடல் நிலை சரியில்லாததால் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனையடுத்து வழக்கின் தீர்ப்பு ஆகஸ்ட் 4ஆம் தேதி (இன்று) அறிவிக்கப்படும் எனக் கூறி நீதிபதி ஒத்திவைத்தார்.

அதன்படி இன்று தீர்ப்பு வாசித்த நீதிபதி அல்லி, குற்றஞ்சாட்டப்பட்ட 9 பேரையும் குற்றவாளிகளாக அறிவித்தார். அதேபோல தண்டனை குறித்த விவரங்களை இன்று மதியம் வெளியிடுவதாகவும் கூறியிருந்தார். அப்போது அரசுத் தரப்பில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது. தற்போது தண்டனை குறித்த விவரங்களை நீதிபதி வெளியிட்டுள்ளார். அதன்படி 7 பேருக்கு தூக்கு தண்டனையும் இருவருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். 

LEAVE A REPLY