பிறக்கும் குழந்தைக்கு 62 ஆயிரம் ரூபாய் கடன்…. ஸ்டாலின் அதிர்ச்சி தகவல்..

118
Spread the love

திமுக தலைவர் ஸ்டாலின் வௌியிட்டுள்ள அறிக்கை… நாட்டு மக்களின் நலனை அறவே புறக்கணித்து  தம்மையும் தம்மைத் தாங்கிப் பிடிக்கும் பினாமிகளையும் மேலும் மேலும் வளப்படுத்திக் கொள்வதற்காகவே, கடன் வாங்கி, தமிழக மக்கள் தலையில் 5.70 லட்சம் கோடி ரூபாய்க் கடனைச் சுமத்தியுள்ள முதல்வர் பழனிசாமி மற்றும் நிதியமைச்சரும் துணை முதல்வருமான  ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு, திமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். 2006 – 2011 வரையிலான திமுக  ஆட்சியில் வாங்கிய கடன் வெறும் 44 ஆயிரத்து 84 கோடி ரூபாய் தான். ஆனால் தற்போது அ.தி.மு.க. ஆட்சியில் வாங்கப்பட்டுள்ள கடன் மட்டும் 3.55 லட்சம் கோடி. இது இறுதிக் கணக்கு வரும் போது இன்னும் அதிகரிக்கும். வருவாய் பற்றாக்குறையும், நிதி பற்றாக்குறையும் வரிந்து கட்டிக் கொண்டு உயர்ந்து நிற்கின்றன. தி.மு.க. ஆட்சியில் 10.5 சதவீதமாக இருந்த வருமானம், அ.தி.மு.க. ஆட்சியில் தற்போது 7.2 சதவீதமாக குறைந்து விட்டது.  தேர்தலுக்கு முன் பணிகளை மேற்கொண்டு நிறைவேற்ற முடியாது என்று நன்கு அறிந்திருந்தும் கூட, கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட மதிப்புள்ள டெண்டர்களை விடுத்து – அரசு கஜானாவை காலி செய்துள்ளார் முதலமைச்சர். அ.தி.மு.க. ஆட்சியில் உள்ள பொதுத்துறை நிறுவனங்கள் 78,854.25 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கி வருகிறது.  2011 முதல் 2017 வரையிலான ஆண்டுகளில் நிதி நிலை மிக மோசமானதன் விளைவாக 10.9 சதவீதமாக இருந்த தொழில் வளர்ச்சி 4.6 சதவீதமாக குறைந்து சரிந்து விட்டது என்று அ.தி.மு.க.வின் கூட்டணிக் கட்சியான மத்திய பா.ஜ.க. அரசின் 15-ஆவது நிதிக்குழுவின் அறிக்கையே சொல்கிறது. அ.தி.மு.க. ஆட்சியில் தொடர்ந்து அதிகரித்து வரும் வருவாய் பற்றாக்குறையால் கடன் அதிகரித்து வருகிறது. இன்றைக்கு தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவர் தலையிலும் – ஏன் பிறக்கும் குழந்தையின் தலையில் கூட, 62 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் கடனை அ.தி.மு.க. அரசு சுமத்தி விட்டுச் செல்கிறது. அனைத்து முறைகேடுகளையும் விசாரித்து உரிய நடவடிக்கை எடுத்து – தமிழகத்தின் நிதி நிலைமை – தமிழக மக்களுக்காக – தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக – என்பதை உறுதிப்படுத்திடும் வகையில் வேகமாகச் சீரமைக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

LEAVE A REPLY