ஐபிஎல் போட்டி… ஹர்ஷல் படேல் “ஹாட்ரிக்”… கோலி புதிய சாதனை..

165
Spread the love

துபாயில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் நேற்று பெங்களூரு மற்றும்  ‘நடப்பு சாம்பியன்’ மும்பை அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற மும்பை அணி கேப்டன் ரோகித், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். பெங்களூரு அணிக்கு தேவ்தத் படிக்கல் (0) ஏமாற்றினார். பும்ரா, மில்னே பந்தில் தலா ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி விளாசினார் கேப்டன் கோஹ்லி. இவருக்கு ஸ்ரீகர் பரத் (32) ஒத்துழைப்பு தந்தார். குர்னால் பாண்ட்யா பந்தை சிக்சருக்கு அனுப்பிய மேக்ஸ்வெல், மில்னே வீசிய 13வது ஓவரில் 2 பவுண்டரி விரட்டினார். அபாரமாக ஆடிய கோஹ்லி, ஐ.பி.எல்., அரங்கில் தனது 42வது அரைசதமடித்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு 51 ரன் சேர்த்த போது மில்னே பந்தில் கோஹ்லி (51) அவுட்டானார். மில்னே வீசிய 18வது ஓவரில் ஒரு சிக்சர், 2 பவுண்டரி அடித்து அரைசதம் கடந்தார் மேக்ஸ்வெல். பும்ரா வீசிய 19வது ஓவரில் மேக்ஸ்வெல் (56), டிவிலியர்ஸ் (11) வெளியேறினர். பெங்களூரு அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 165 ரன் எடுத்தது. கைல் ஜேமிசன் (2), கிறிஸ்டியன் (1) அவுட்டாகாமல் இருந்தனர்.

  சவாலான இலக்கை விரட்டிய மும்பை அணிக்கு குயின்டன் டி காக் (24), கேப்டன் ரோகித் (43) நல்ல துவக்கம் தந்தனர். இஷான் கிஷான் (9), சூர்யகுமார் யாதவ் (8), குர்னால் பாண்ட்யா (5) சொற்ப ரன்னில் அவுட்டாகினர். ஹர்ஷல் படேல் வீசிய 17வது ஓவரின் முதல் மூன்று பந்தில் ஹர்திக் பாண்ட்யா (3), போலார்டு (7), ராகுல் சகார் (0) அவுட்டாக, ‘ஹாட்ரிக்’ சாதனை பதிவானது. சகால் பும்ரா (5)வை  போல்டாக்கினார். தொடர்ந்து அசத்திய ஹர்ஷல் பந்தில் மில்னே (0) வெளியேறினார். மும்பை அணி 18.1 ஓவரில் 111 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. பெங்களூரு சார்பில் ஹர்ஷல் படேல் 4 விக்கெட் கைப்பற்றினார். அபாரமாக ஆடிய பெங்களூரு கேப்டன் கோஹ்லி 51 ரன் விளாசினார். இவர், தனது 13வது ரன்னை கடந்த போது டி-20 போட்டிகளில் 10 ஆயிரம் ரன்னை கடந்த முதல் இந்திய வீரர், 5வது சர்வதேச வீரரானார். இதுவரை 314 போட்டியில், 5 சதம், 74 அரைசதம் உட்பட 10038 ரன் எடுத்துள்ளார். ஏற்கனவே வெஸ்ட் இன்டீசின் கெய்ல் (14275 ரன்), போலார்டு (11195), பாகிஸ்தானின் சோயப் மாலிக் (10808), ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் (10019) ஆகியோர் 10 ஆயிரம் ரன்களை கடந்த வீரர்களாவர்.. 

LEAVE A REPLY