பா.ஜ.க. தலைவராக ஜே.பி.நட்டா… தேர்ந்தெடுக்கப்பட்டார்

167
பாஜகவின் தேசியத் தலைவராக, கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூலை 9 ஆம் தேதி பொறுப்பேற்று கொண்ட அமித் ஷா. இதுநாள்வரை அந்த பதவியை அவர் வகித்து வந்தார்.
 
 
அவரது தலைமையில் கடந்த 2014, 2019 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலாக இருக்கட்டும்; கடந்த ஐந்தாண்டுகளில் நடைபெற்ற பல்வேறு மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல்களா இருக்கட்டும். இத்தேர்தல்களில் பெரும்பாலானவற்றில் பாஜக மகத்தான வெற்றி பெற்றது.

“காங்கிரஸ் இல்லாத இந்தியா” என்ற பாஜகவின் பிரதான குறிக்கோளை எட்டும் அளவுக்கு அக்கட்சியை அமித் ஷா சிறப்பாக வழிநடத்தி வந்தார்.

இடதுசாரிகளின் ஆதிக்கம் நிறைந்த மேற்கு வங்க மாநிலத்தில் கூட, ஆளும் திரிணாமூல் காங்கிரஸுக்கு நேரடியாக டஃப் தரும் அளவுக்கு பாஜகவை கொண்டு வந்துள்ளதே அமித் ஷாவின் திறமைக்கு ஆகச்சிறந்த உதாரணம்.

தொடர்ந்து பாஜகவை வெற்றிப் பாதையில் இட்டு சென்றுக் கொண்டிருந்த அமித் ஷா, 2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சிறப்பான வெற்றி பெற்றதையடுத்து, பிரதமர் மோடியின் அமைச்சரவையில் ‘பவரான’ பதவிகளில் ஒன்றான, மத்திய உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

அதேசமயம் கட்சியின் தேசியத் தலைவராகவும் அவர் தொடர்ந்து நீடித்து வந்தார். அவருக்கு உதவியாக, பாஜகவின் தேசிய செயல் தலைவராக ஜே.பி. நட்டா,  கடந்த ஆண்டு ஜூன் 17 ஆம் தேதி பொறுப்பேற்று கொண்டார். 
அப்போதே எதிர்காலத்தில் கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு இவர் தான் வருவார் எனக் கணிக்கப்பட்டது. அதன்படியே, பாஜகவின் தேசியத் தலைவராக ஜே.பி.நட்டா இன்று (ஜனவரி 20) அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக, டெல்லியில் உள்ள கட்சித் தலைமையகத்தில் இதற்கான தேர்தல் நடைபெற்றது. கட்சியின் அமைப்பு தேர்தல் பொறுப்பாளர் ராதாமோகன் சிங் தலைமையில் காலை 10 மணி முதல் மதியம் 12:30 மணி வரை, வேட்புமனு தாக்கல் உள்ளிட்ட தேர்தல் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், பாஜகவின் தேசியத் தலைவராக ஜே.பி.நட்டா போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துத் தெரிவித்தனர்.

தேசிய அளவில் தற்போது பெரிய கட்சியாக விளங்கும் பாஜகவின் தேசியத் தலைவராக பொறுப்பேற்றுள்ள ஜே.பி.நட்டா, முன்னாள் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY