ஜாமீனில் வந்த வாலிபர் தற்கொலை…. விசாரணையில் அதிர்ச்சி…

144
Spread the love

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ராஜகிரி கோட்டை மலை அடிவாரத்தில் உள்ள சிவன் கோவில் மண்டபம் அருகே வாயில் நுரை தள்ளியபடி வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து, போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்படி போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது அந்த வாலிபரின் அருகில் குளிர்பான பாட்டில் மற்றும் விஷ பாட்டில் கிடந்தது. இதன் மூலம் அந்த வாலிபர், குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டது போலீசாருக்கு தெரியவந்தது. இதனை தொடர்ந்து அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து வாலிபரின் சட்டைப்பையில் இருந்த ஆதார் கார்டை போலீசார் எடுத்து பார்த்தனர். அதில், விக்கிரவாண்டி அருகே உள்ள பனையபுரத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராக்கி என்ற ராதாகிருஷ்ணன்(24) என்பது தெரியவந்தது.

தற்கொலை செய்து கொண்ட ராதாகிருஷ்ணன் பற்றி போலீசார் விசாரணை நடத்தியபோது பரபரப்பு தகவல் வெளியாகியது… அதில்… ராதாகிருஷ்ணனுக்கும், பனையபுரத்தை சேர்ந்த லியோபால் என்பவரது மனைவி சுஜிதாமேரிக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இவர்களது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கடந்த 5.2.2021 அன்று ராதாகிருஷ்ணனும், கள்ளக்காதலி சுஜிதாமேரியும் சேர்ந்து லியோபாலை கொலை செய்து வீட்டின் பின்புறத்தில் உள்ள தோட்டத்தில் புதைத்தனர்.

பின்னர் ராதாகிருஷ்ணன், கள்ளக்காதலி சுஜிதாமேரியுடன் தலைமறைவானார். இது தொடர்பாக விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். அப்போது ஏற்கனவே அன்பு என்பவரை லியோபாலுடன் சேர்ந்து கொலை செய்து ஆற்றில் புதைத்ததாக ராதாகிருஷ்ணன் அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். இது தொடர்பாக போலீசார் மற்றொரு வழக்கு பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து ராதாகிருஷ்ணன் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஜாமீனில் வந்த ராதாகிருஷ்ணன், பெங்களூருவில் உள்ள தனது அக்காள் வீட்டில் தங்கி இருந்தார். கடந்த 4 நாட்களுக்கு முன்பு வேலைக்கு செல்வதாக அக்காளிடம் கூறிவிட்டு வந்த ராதாகிருஷ்ணன், செஞ்சிக்கோட்டையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY