மதுரையில் ஜெயலலிதா கோயில்… முதல்வர் திறந்து வைத்தார்…

124
Spread the love

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு மதுரையில் கோயில் கட்டி இன்று திறப்பு விழா நடைபெற்றது. தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டில்,  ஜெயலலிதா பேரவை மற்றும் அம்மா சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக  திருமங்கலம் டி.குன்னத்தூரில் இந்த கோயில் கட்டப்பட்டு உள்ளது. 12 ஏக்கர் நிலபரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த கோயிலில் முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் 7 அடி உயர முழு உருவ வெண்கலச்சிலைகள் நிறுவப்பட்டுள்ளது. ஒவ்வொரு சிலையும் 400 கிலோ எடை கொண்டதாகும். இந்த சிலைககள் கடந்த 14-ந்தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து தினமும் பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. ஆர்.பி.உதயகுமார் மற்றும் அவரது குடும்பத்தினர், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் விரதம் இருந்து தினமும் இதற்கான கும்பாபிஷேக பணிகளை கவனித்து வந்தனர். இந்நிலையில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா திருக்கோவில் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த கோயிலை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் திறந்து வைத்தனர். பின்னர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு நடைபெற்ற கும்பாபிஷேக நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வணங்கினர். முன்னதாக கடந்த 2 நாட்களாக யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டன.

கும்பாபிஷேகம் முடிந்த உடன் அங்கு அமைக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பு பயிற்சி மையம், கலையரங்கம் ஆகியவற்றையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். பின்னர் நடைபெற்ற கோ பூஜையில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டனர். அப்போது 120 பசுக தானமாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில், தொகுதிக்கு ஒருவர் என தேர்தெடுக்கப்பட்ட நலிவுற்ற அதிமுக தொண்டர்களுக்கு சால்வை மற்றும் பொற்கிழிகளை எடப்பாடி பழனிசாமி வழங்கினார். மேலும்  ஏழை-எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டிருந்த விழா மேடையில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் பேசினர்.

 
எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம்

விழாவில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஜெயலலிதா கோவில் திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அதிமுகவினர் பாதயாத்திரையாக வந்திருந்தனர். முதல்-அமைச்சர் வருகையையொட்டி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

LEAVE A REPLY