கண்ணதாசனும்… கல்லூரி பேராசிரியையும்…

299
Spread the love

ஒரு முறை கல்லூரிப் பேராசிரியை ஒருவர் வானொலியில் கண்ணதாசனை தாக்கி பேசினார். கண்ணதாசன் சொந்தமாக எழுதாமல் இலக்கியங்களை காப்பியடித்து பாடல்களை இயற்றுகிறார் என்ற  தொனியில் அவர் பேசினார். இதற்கு பல தரப்பிலும் அவருக்கு பாராட்டு கிடைத்தது. பின்னர் நடந்தது குறித்து பேராசிரியை சொன்னது.

சென்னை வானொலியில் ‘இலக்கியங்களும் திரைப்படப் பாடல்களும்’ என்ற தலைப்பில் உரையாற்ற என்னை அழைத்திருந்தனர். அதில் பேசிய நான்  இலக்கியங்களில் சொல்லப்பட்ட பல விஷயங்களை கவிஞர் கண்ணதாசன் எப்படி தன் பாடல்களில் எடுத்துக் கையாண்டிருந்தார் என்பதை விளக்கி,  கண்ணதாசன் பண்டைய இலக்கியங்களில் இருந்து நிறைய காப்பியடித்துள்ளார் என்ற ரீதியில் பேசினேன்.  ஒலிப்பதிவு செய்யப்பட்டு இரண்டு நாள் கழித்து என்னுடைய உரை வானொலியில் ஒலிபரப்பானது. அதன்பின் அடுக்கடுக்காக போன் கால்கள். யார், யாரோ போன் செய்து பாராட்டினர். சபாஷ்.. இத்தனை காலம்  கண்ணதாசனே சொந்தமாக எழுதி இருக்கிறார் என நினைத்துக் கொண்டிருந்தோம் இப்போதான் உண்மை தெரிந்தது என்றனர். பின்னர் ஒரு போன் கால். மறுமுனையில் பேசியது கண்ணதாசன். நான் பதறிப் போனேன்.  கை, கால் ஓடவில்லை. உலர்ந்து போன உதடுகள் ஒட்டிக் கொண்டன.  கை நடு நடுங்க “சொல்லுங்க சார்  என்றேன்.  வானொலியில் உங்களின் உரை கேட்டேன் மிக அருமையாக பேசியிருந்தீர்கள். ஒரு விஷயத்தை உங்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன். பண்டைய இலக்கியங்களிலும், இதிகாசங்களிலும் சொல்லப்பட்டிருக்கும் பல நல்ல விஷயங்கள்,உங்களைப்போன்ற பேராசிரியர்கள், பண்டிதர்கள் மட்டத்தோடு நின்று விடுகின்றன. ஆனால் திரைப்படப் பாடல்கள்  கடைக்கோடி ,குக்கிராமத்தில், மாடு மேய்ப்பவர் வரை செல்லும் வலிமை பெற்றது. அதனால் அவற்றை எளிமைப்படுத்தி தருகிறேன். திருமணங்களில் ஓதப்படும் சமஸ்கிருத வேத மந்திரங்களில், கணவன் மனைவிக்கிடையேயான மன ஒற்றுமையை எடுத்துக் காட்ட நான் மனமாக இருந்து நினைப்பேன். நீ வாக்காக இருந்து பேசு’ என்று ஒரு வரி வரும். அது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்..? ஆனால் அதையே நான் “நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்” என்று எழுதியபோது பெரும்பாலான மக்களை சென்றடைந்தது. இது தவறு என்று சொல்கிறீர்களா?” என்றார். இதனால்  உண்மை நிலையை உணர்ந்த நான் தடுமாறி  “மன்னித்துக் கொள்ளுங்கள் சார் என்றேன். அது முதல் அவர் மேல் எனக்கிருந்த மதிப்பு பல மடங்கு அதிகரித்து விட்டது” என்றார்.

LEAVE A REPLY