Spread the love

 திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் லோக்சபா தேர்தல் பிரசாரத்தை கடந்த 20 ஆம் தேதி திருவாரூரில் தொடங்கினார். இந்நிலையில் இன்று பிரசாரம் நிறைவு பெறும் நிலையில் ஸ்டாலின் தனது பிரசாரத்தை திருவாரூரிலேயே நிறைவு செய்கிறார். இன்று காலை அவர் வலங்கைமானில்  இ. கம்யூ.,  வேட்பாளர் செல்வராஜை ஆதரித்து  பேசியது:

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மறுநாளே நான் பாதிக்கப்பட்டவர்களை நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினேன் . ஆனால் முதல்வர் ஒரு வாரத்திற்கு பின் ஹெலிகாப்டரில் வந்து  சென்றார். பிரதமர் மோடி ஆறுதல் வார்த்தை கூட  தெரிவிக்கவில்லை. மேலும் தமிழக அரசு கேட்ட நிதியையும் ஒதுக்கீடு செய்யவில்லை.
5 முறை முதல்-அமைச்சராக பதவி வகித்தவர் கருணாநிதி. அவருடைய ஆசை மெரினாவில் அண்ணா சமாதியின் அருகிலே அவரது உடலை வைக்க வேண்டும் என்பதுதான். அதை நிறைவேற்ற நான் நேரடியாக முதல் அமைச்சருக்கு கோரிக்கை விடுத்தேன். வெட்கத்தை விட்டு எடப்பாடி வீட்டுக்கு நேரடியாக சென்று கேட்டோம். ஆனால் ஆறடி நிலம் கூட கொடுக்க மறுத்து விட்டனர். 

நமது தலைவருக்கு, ஆறடி நிலம் கொடுக்க மறுத்தவர்களுக்கு, தமிழகத்தில் இடம் கொடுக்கக் கூடாது. கலைஞரின் மகனாக உங்களிடம் வந்து நான் ஓட்டு கேட்கிறேன். நாம் வெற்றி பெற்று கலைஞர் நினைவிடத்தில் கலைஞரின் ஆசையை நிறைவேற்றி வெற்றிக்கனியை மாலையாக வைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். திருவாரூர் நகரில் இன்று மாலை வீதி,வீதியாக பிரசாரம் செய்யும் ஸ்டாலின் மாலை 6 மணிக்கு  பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.

LEAVE A REPLY