காதலனின் திருமணத்தை தடுத்து நிறுத்திய காதலி…..

86
Spread the love

சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த 30 வயது வாலிபர், அங்குள்ள மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவரும், திருவள்ளூரை அடுத்த திருவாலங்காடு பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரும் 7 வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் அந்த வாலிபருக்கு, வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. நேற்று காலை வில்லிவாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் இவர்களின் திருமணம் நடைபெற இருந்தது. இதில் வாலிபரின் உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக நேற்று முன்தினம் இரவு இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்து முடிந்தது.

தனது காதலனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடைபெற இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்த இளம்பெண், நேற்று காலை தனது உறவினர்கள் சிலருடன் வில்லிவாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்துக்கு சென்று தாங்கள் இருவரும் காதலித்ததற்கான ஆதாரங்களை இருவீட்டாரிடமும் காண்பித்து காதலனின் திருமணத்தை நிறுத்தும்படியும், தன்னை அவருடன் சேர்த்து வைக்கும்படியும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அவரது காதலனுக்கு நடைபெற இருந்த திருமணம் நிறுத்தப்பட்டது. திருமணம் நின்றுபோனதால் மணமக்களை வாழ்த்த வந்திருந்த இருவீட்டாரின் உறவினர்களும் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர். இதையடுத்து அந்த பெண், காதலனுடன் தன்னை சேர்த்து வைக்க கோரி வில்லிவாக்கம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

LEAVE A REPLY