Skip to content
Home » விதிகளை மீறி கொடைக்கானலில் கட்டிடம்… நடிகர் பிரகாஷ் ராஜ்க்கு நோட்டீஸ்

விதிகளை மீறி கொடைக்கானலில் கட்டிடம்… நடிகர் பிரகாஷ் ராஜ்க்கு நோட்டீஸ்

  • by Senthil

கொடைக்கானலில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வில்பட்டி பகுதியில் விதிகளை மீறி வீடு கட்டி வரும் நடிகர் பிரகாஷ்ராஜ், பேத்துப்பாறை பகுதியில் வீடு கட்டி வரும் பாபி சிம்ஹா ஆகியோருக்கு எவ்வாறு அனுமதி அளிக்கப்பட்டது என விவசாயிகள் பரபரப்பு குற்றச்சாட்டுகளை எழுப்பினர். கொடைக்கானல் பகுதியில் கனரக வாகனங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் நடிகர்களுக்கு மட்டும் சிறப்பு அனுமதி வழங்கியது ஏன்? சுமார் 25 நாட்களுக்கு மேலாக ஜே.சி.பி. எந்திரம் பயன்படுத்த அனுமதி வழங்கியது யார்? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர். இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த ஊர் தலைவர் மகேந்திரன் கூறியதாவது:

நடிகர் பிரகாஷ்ராஜ் பங்களாவுக்கு வணிக பயன்பாட்டுக்கான மின்சார அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. லஞ்சம் கொடுத்து பஞ்சாயத்து அனுமதியின்றி சட்டத்துக்கு புறம்பான மின் அனுமதி பெற்றுள்ளனர். பங்களாவுக்கு செல்ல பட்டா நிலத்தில் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு உரிய அனுமதி பெறவில்லை. பாபிசிம்ஹா பங்களாவை ஒட்டி இருக்கும் 2 ஏக்கர் அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. எனவே இது போன்ற பிரச்சனையில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றார்.

இதுகுறித்து கொடைக்கானல் ஆர்.டி.ஓ. ராஜா தெரிவிக்கையில், குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் பிரகாஷ்ராஜ், பாபிசிம்ஹா ஆகியோரது இடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதா? என தாசில்தாரிடம் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன். இந்த புகார்கள் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு சம்மந்தப்பட்ட இடங்கள் அளவீடு செய்யப்படும். இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மின் வாரிய பொறியாளர் முருகேசன் தெரிவிக்கையில், பிரகாஷ்ராஜ் பங்களாவுக்கு தற்காலிக மின் இணைப்பு கேட்டு விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது. வில்பட்டி பஞ்சாயத்துக்கு கட்டும் வரி ரசீது இணைக்கப்பட்டுள்ளது. மின் வாரிய விதிகளின்படி தற்காலிக இணைப்புக்கு பஞ்சாயத்து வரி ரசீது இருந்தால்போதும். கட்டிட அனுமதி தேவையில்லை. கட்டுமான பணி முடிந்ததும் மீண்டும் மின்வாரியத்தை அணுகினால் நிரந்தர மின் இணைப்பு வழங்கப்படும். இதில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை என்றார். இது குறித்து வில்பட்டி பஞ்சாயத்து தலைவர் பாக்கியலட்சுமி ராமச்சந்திரன் தெரிவிக்கையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கட்டிடங்கள் கட்டக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அதனையும் மீறி கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. எனவே விதி மீறி கட்டிடங்கள் கட்டப்பட்டது குறித்தும், கனரக வாகனங்கள் பயன்படுத்தியது குறித்தும் அவர்கள் 2 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்படும் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!