எம்ஜிஆருக்கு சிறுநீரகம் கொடுத்த அண்ணன் மகள் காலமானார்…..

544
Spread the love

1984ம் ஆண்டு அக்டோபர் மாதம் முன்னாள் தமிழக முதலமைச்சர் எம்ஜிஆர் உடல்நிலை மோசமடைந்தார். அதன் பிறகு அவர், அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, மருத்துவமனையில் அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். அப்போது கேரளாவில் இருந்த எம்.ஜி.ஆர் அவர்களின் அண்ணன் எம்.ஜி.சக்கரபாணியின் மகள் லீலாவதி சிறுநீரகம் தானம் செய்வதற்கு முன்வந்தார். திருமணமாகியிருந்த நிலையிலும் கணவரின் ஒப்புதலுடன் தனது சித்தப்பா எம்ஜிஆருக்கு சிறுநீரக தானம் செய்ய ஒப்புக்கொண்ட அவருக்கு, மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பின்னர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தனக்குச் சிறுநீரக தானம் கொடுத்தது லீலாவதிதான் என முதலில் எம்ஜிஆருக்கு தகவல்கள் சொல்லப்படவில்லை. சில நாட்களுக்குப் பின்னர்,

உடல்நலம் பெற்று திரும்பிய எம்ஜிஆருக்கு, நாளிதழ் ஒன்றின் மூலமே தகவல் தெரிய வந்தது. வலம்புரி ஜான் எழுதியிருந்த வாழ்த்துரையில் ‘லீலாவதிக்கு நன்றி’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தத் தகவல் அறிந்ததும் லீலாவதியை ராமாவரம் தோட்டத்து இல்லத்துக்கு அழைத்து கண்ணீருடன் நன்றி சொன்னார் எம்ஜிஆர். இதை லீலாவதியே பதிவு செய்திருக்கிறார். குடும்பத்தில் தன்னையும் பிற குழந்தைகளையும் வளர்த்ததே எம்ஜிஆர் சித்தப்பாதான்! என நெகிழ்ச்சியுடன் சொல்லியிருந்தார் லீலாவதி. இந்நிலையில், தற்போது எம்ஜிஆருக்கு சிறுநீரகத்தை தானம் கொடுத்த லீலாவதி உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். இந்த செய்தி உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 

LEAVE A REPLY