4 ஓட்டுகளை பிரிக்கவே மதியம் ஆயிடும்.. அப்புறம் தான் கவுன்டிங்

246
Spread the love
தமிழகத்தில் உள்ள 315 மையங்களில், சுமார் 25 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் பதிவான ஓட்டு சீட்டுகள் அடங்கிய பெட்டிகள் காலை 7 மணிக்கு வாக்கு எண்ணிக்கை கண்காணிப்பாளர்கள், தேர்தல் முகவர்கள் முன்னிலையில் சீல் உடைக்கப்பட்டு திறக்கப்படுகின்றன. காலை 8 மணிக்கு வாக்கு பெட்டிகள் அனைத்தும் பொது வான வாக்கு எண்ணும் அறைக்கு முதலில் கொண்டு செல்லப்படுகின்றன.தேர்தலில் 4 பதவிகளுக்கும் ஒரே நேரத்தில் வாக்குப்பதிவு நடைபெற்றதால், ஒவ்வொரு வாக்காளர்களும் தலா 4 வாக்குகள் பதிவு செய்து உள்ளனர். முதலில் ஓட்டு எண்ணும் மையத்தில் அமைக்கப்பட்டு உள்ள 30 மேஜைகளில் ஓட்டுகள் கொட்டப்படும். ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு கண்காணிப்பாளர் மற்றும் 3 ஓட்டு எண்ணுபவர்கள் பணியில் இருப்பார்கள். இவர்கள், ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி தலைவர், யூனியன் கவுன்சிலர் மற்றும் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் பதவிகளுக்கு பதிவான ஓட்டுகளை அடுக்கி, தனித்தனியாக பிரிப்பார்கள். 4 பதவிகளுக்கும் பதிவான ஓட்டுகளை எண்ணுவதற்காக தனித்தனியாக அறைகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இந்த 4 அறைகளுக்கும் அந்தந்த அறைகளுக்கான ஓட்டுகள் கொண்டு செல்லப்படும். பின்னர் யூனியன் கவுன்சிலர் மற்றும் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் பதவிகளுக்கு கட்சி வாரியாக போடப்பட்ட வாக்குகள் பிரித்து எண்ணப்படும். 8 ரவுண்டுகளாக ஓட்டுகள் எண்ணும் பணி நடக்கும். ஓட்டுகளை பிரிக்கும் பணியே இன்று பகல் 1 மணிக்கு மேல் வரை ஆகும் என்று கூறப்படுகிறது. ஓட்டுகள் எண்ணும் பணியில் சுமார் 2 லட்சம் பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ஆயிரம் ஓட்டுகளுக்கு குறைவாகவும், ஊராட்சி தலைவர் பதவிக்கு சில ஆயிரம் ஓட்டுகள் மட்டும் எண்ண வேண்டியிருப்பதால் இன்று மதியத்துக்கு பிறகு முடிவுகள் தெரியவரும். ஆனால் ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவி மற்றும் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் ஆகிய பதவிகளுக்கு 10 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் வரை இருக்கும் என்பதால் இன்று பிற்பகலில் இருந்து படிப்படியாக முடிவுகள் தெரியவரும். ஊராட்சி கவுன்சிலர், ஊராட்சி தலைவர், ஒன்றியக் குழு கவுன்சிலர் மற்றும் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் பதவிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு உடனுக்கு உடன் வெற்றி பெற்றதற்கான அதிகாரபூர்வ சான்றிதழ்கள் வழங்கப்படும்.இதைத் தொடர்ந்து வரும் 6-ந் தேதி கிராம ஊராட்சி அமைப்புகளுக்கான கூட்டம் நடைபெறுகிறது. அதன்பிறகு 11-ந்தேதி கிராம ஊராட்சியின் துணைத்தலைவர், ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர், ஒன்றியக் குழு துணைத்தலைவர், மாவட்ட ஊராட்சித் தலைவர் மற்றும் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் ஆகிய பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் நடைபெறுகிறது. பொதுமக்கள் வாக்களித்து தேர்வு செய்துள்ளவர்கள் இந்த பதவிகளுக்கான ஆட்களை தேர்வு செய்வார்கள்.

LEAVE A REPLY