நேரடி இல்லை.. கவுன்சிலர்கள் தான் மேயரை தேர்ந்தெடுப்பார்கள்

1412
Spread the love

தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் உள்ளது. எனவே, உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் பதவி காலம் இதுவரை 6 முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகளை, மாநில தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. இதையடுத்து வாக்காளர் பட்டியல் தயார் செய்வது மற்றும் வாக்குச்சாவடிகள் அமைப்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது. மேலும் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பு நவம்பர் மாத இறுதியில் வெளியிடப்படும் என்றும் டிசம்பர் இறுதியில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறம் என்று மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்களும் விரைவில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறும் என கூறி வருகின்றனர். இந்த நிலையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தலைவர் பதவிகளை நேரடியாக தேர்ந்தெடுக்கும் திட்டம் இல்லை என்றும் கவுன்சிலர்கள் மூலமாகவே தலைவர்கள் தேர்ந்தெடுக்கும் முறைக்கு நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போது உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான பணிகள் நடைபெற்றன. அப்போது மேயர், நகராட்சித் தலைவர்கள் போன்ற உள்ளாட்சித்தலைவர்கள் பதவிகளை மக்களே நேரடியாக தேர்ந்தெடுக்கும் வகையில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. தற்போது அதிமுக கூட்டணியில் உள்ள பாஜ, பாமக, தேமுதிக உள்ளிட்ட  கட்சிகள் கணிசமான உள்ளாட்சி பதவியிடங்களை பெற்று விட வேண்டும் என முயற்சியில் உள்ளன. அதிலும் குறிப்பாக மேயர் பதவியிடங்களை இந்த கட்சிகள் குறி வைப்பதை கவனித்த அதிமுக தலைமை, இதனை சமாளிக்க முடிவு செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக தலைவர்களை நேரடியாக தேர்ந்தெடுக்கும் திட்டத்தை மாற்றி அமைக்க முடிவு செய்து கவுன்சிலர்கள் மூலமே தலைவர்கள் தேர்ந்தெடுக்கும் முறைக்கு நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் ஓப்புதல் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.. 

LEAVE A REPLY