காதல் கற்பனையில் இனிக்கிறது.. நிஜத்தில் கசக்கிறது..

85
Spread the love
காதல் ஜோடியாகும் இருவரிடமும் உண்மை தேவை. ஒருவர் உண்மையாக நடந்துகொள்ள, இன்னொருவர் அதை பலவீனமாக நினைத்து ஏமாற்ற முற்படும்போது உண்மையானவர் சுதாரித்துக்கொண்டு விலகிட வேண்டும். காதல் சக்தி மிகுந்தது. நல்லவர்களுக்கு அது சுகமானது. பொழுதுபோக்கும் எண்ணம் கொண்டவர்களுக்கு அது சோகமானது. காதல் உணர்வுரீதியானது. அதனால், உண்மையில்லாத காதலரை மறப்பது கஷ்டம்தான். அதற்காக ஏற்கக்கூடாத காதலை ஏற்று, வாழ்க்கையை ஏமாற்றிக்கொள்ளக்கூடாது. கவிஞர்கள் காதலைப் பற்றி ஏராளமான கற்பனைகளை வடித்து வைத்திருக்கிறார்கள். ஆனால் அவை எல்லாம் நிஜவாழ்க்கையோடு ஒத்துப்போகாது. காதல் கற்பனையில் இனிக்கும். நிஜத்தில்தான் கசக்கும்.
 
பெண்களிடம் தவறான எண்ணத்தோடு பழகும் ஆண்கள்கூட அந்த நெருக்கத்திற்கு காதல் என்று பெயர் சூட்டிக்கொள்கிறார்கள். பெண்களின் பலவீனத்தை புரிந்துகொண்டு காதல் என்ற பெயரில் ஏமாற்ற நினைக்கும் ஆண்களை, பெண்கள் புரிந்துகொண்டு விலகவேண்டும். அதுதான் அவர்களுக்கு பாதுகாப்பு.
 
இன்றைய இளையதலைமுறையினர் தகவல்தொடர்பு சாதனங்களை பயன்படுத்தி காதல் தூதுவிட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அதனால் தடம் மாறிய காதல் சகஜமாகிவிட்டது. ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் விழித்துக்கொள்ளும்போது நடந்ததை ஒரு கெட்ட கனவாக நினைத்து பழைய விஷயங்களை மறந்துவிட வேண்டியதுதான். அதையே நினைத்து அழுதுகொண்டிருக்கக்கூடாது. அந்த தவறை மீண்டும் செய்யவும்கூடாது.
 
அதே நேரத்தில் பணத்திற்காக காதல் வலைவீசும் பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் வலைத்தளங்களின் வழியாக வசதியான ஆண்களை காதலிப்பதுபோல் நடித்து, வசமாக சிக்கவைத்து பணம் பறிக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களிடம் மிக கவனமாக பழகவேண்டும். காதல் புனிதமானதுதான். காதலிப்பவர்களும் புனிதமானவர்களாக இருந்தால்தான் அந்த புனிதத்தை காப்பாற்ற முடியும்.

LEAVE A REPLY