காதல் மனைவியை 5 நாளில் எரித்துக்கொன்ற கணவர் கைது…

173
Spread the love

மதுரை மாவட்டம், சோழவந்தான் ராயபுரத்தை சேர்ந்தவர் க்ளாடிஸ் ராணி (21). அவனியாபுரம் அருகே தனியார் மகளிர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கும், அவனியாபுரம் பெரியார் நகரை சேர்ந்த ஜோதிமணிக்கும்(23) பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில் க்ளாடிஸ் ராணி 5 மாதம் கர்ப்பமானார். இந்த விஷயம் அவரது பெற்றோருக்கு தெரிய வந்தது. இதையடுத்து ஜோதிமணியை அழைத்து பெற்றோர் பேசியுள்ளனர். ஆனால், அவர் கர்ப்பத்திற்கு தான் காரணமில்லையென கூறியதாக தெரிகிறது. பின்னர் நடந்த பேச்சு வார்த்தையில் ஜோதிமணியின் பெற்றோருக்கு தெரியாமல், கடந்த 2ம் தேதி ஜோதிமணிக்கும், க்ளாடிஸ் ராணிக்கும் திருமணம் செய்து வைத்தனர். பின்னர் 4ம் தேதி மனைவியை, ஜோதிமணி பெரியார் நகரில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து சென்றார். பின்னர் மனைவியை காணவில்லையென அவரது பெற்றோரிடம் ஜோதிமணி கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த க்ளாஸ்டிஸ் ராணியின் பெற்றோர், மகளை காணவில்லையென சோழவந்தான் காவல்நிலையத்தில் புகார் செய்தனர். வழக்குப்பதிவு செய்த போலீசார் சந்தேகத்தின்பேரில் ஜோதிமணியிடம் விசாரணை நடத்தினர்.

ஜோதிமணி, க்ளாஸ்டிஸ் ராணியை அவனியாபுரம் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் எரித்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ஜோதிமணியை நேற்று கைது செய்தனர். திருமணமான ஐந்து நாட்களில் காதல் மனைவியை, கணவரே எரித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY