மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்!

147

ஜப்பானியர்களின் வெற்றிக்கு முதுகெலும்பாக விளங்கும் ஒரு கொள்கை – ‘கைசன்’.  ஒரு வேலையை எவ்வளவு சிறப்பாகச் செய்தாலும் அடுத்த முறை இந்த வேலையை இதைவிடச் சிறப்பாக செய்ய வேண்டும்’ என்பதுதான் அந்தக் கொள்கை.

வெற்றியைப் பற்றி பேசும்போது, இரண்டு பேர் சண்டைபோட்டால் ஒருவர் வெற்றி பெறுவார்… இன்னொருவர் தோல்வி அடையத்தான் செய்வார். இருவருமே வெற்றியடைய முடியுமா? முடியும் அதற்கு Win Win Method என்று பெயர்.

ஒரு நிறுவனத்தில் பிரச்னை.. இரண்டு நிர்வாகிகள் இது பற்றி விவாதிக்கிறார்கள். ஒருவர் ஒரு கருத்தைச் சொல்கிறார். அடுத்தவர் இவரின் கருத்துக்கு மாறுபட்ட கருத்தை வைத்திருக்கிறரர். இருவரும் விவாதம் செய்கிறார்கள். இந்த விவாதத்தில் ஒருவர் ஜெயித்தால் இன்னொருவர் தோற்க வேண்டும். ஆனால், இந்த இருவருமே, ‘உன்னுடைய கருத்து சரியா?’ என்று பார்க்காமல், இந்த நேரத்துக்கு எந்தக் கருத்து சரி என்று கருத்தின் தன்மையை மட்டும் பார்த்து ஒரு முடிவுக்கு வரும்போது, பிரச்னைக்குச் சரியான தீர்வைக் கண்டறிந்த மகிழ்ச்சியில் இருவருமே வெற்றி அடைந்ததைப் போல சந்தோஷப்படுவார்கள். இதுதான் Win Win Method.

வெற்றி மீது எனக்கு ஆசை இருக்கிறது. எனக்குத் திறமையும் இருக்கிறது. ஆனால் உடன் வேலை செய்பவர்கள்தான் என்னை அமுக்கி வைக்கிறார்கள், முன்னேற விடாமல் தடுக்கிறார்கள்’ என்று யார் சொன்னாலும் அதை நம்புவது சிரமமாக இருக்கும். ஏனென்றால், வெற்றிப் படிகளில் ஏற விரும்புவது யாராக இருந்தாலும் அவர்களைக் குப்புறத் தள்ளிக் குழி தோண்டி மண்ணுக்கு அடியில் புதைத்தாலும் அவர்கள் மரமாக மீண்டும் முளைத்துக் கொண்டு மேலே வருவது நிச்சயம். தீப்பந்தத்தைப் பூமியை நோக்கிக் கவிழ்த்தாலும், தீயின் ஜுவாலை வானத்தை நோக்கித்தான் இருக்கும்.  நாம் சாதிக்கப் பிறந்தவரா இல்லையா என்பதை நம்மை கேட்டு இந்த உலகம் அறிந்து கொள்ளாது. நமது சாதனையை வைத்துதான் உலகம் நம்மை எடை போடும். மனசே, ரிலாக்ஸ்!

LEAVE A REPLY