அரைவேக்காட்டுத்தனம்.. கமலை விமர்சனம் செய்து முரசொலி கட்டுரை

218
Spread the love

கடை விரித்தேன் கொள்வாரில்லை என்பதை போல கமல்ஹாசன் நிதானமின்றி பிதற்றுகிறார்” என்று திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியில் செய்திக்கட்டுரை வெளியாகியுள்ளது. கமல்ஹாசன், திமுக இடையே கருத்து வேறுபாடு அதிகரித்து வரும் நிலையில், திமுகவை மீண்டும் கமல் விமர்சித்தார். சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், கிராம சபைக் கூட்டம் 25 ஆண்டுகளாக இருந்து வருகிறது என்றும், அப்போது என்ன செய்தீர்கள் எனவும் வினவினார். அத்துடன், சட்டப்பேரவையில் தாம் சட்டையை கிழித்துக்கொண்டு நின்றதில்லை எனவும் திமுக தலைவர் ஸ்டாலினை மறைமுகமாக சாடினார். கமலின் விமர்சனம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு புதுச்சேரியில் பதில் அளித்த மு.க.ஸ்டாலின், தான் அரசியல் மட்டுமே பேசுவதாக தெரிவித்தார். கமலின் விமர்சனம் குறித்து பேசிய உதயநிதி ஸ்டாலின், கமல்ஹாசன் அறியாமையில் பேசுகிறார் என்று தெரிவித்தார். இந்நிலையில் திமுக மீதான கமல்ஹாசனின் விமர்சனத்துக்கு பதில் கூறும் விதமாக திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியில் செய்திக்கட்டுரை வெளியாகியுள்ளது.

‘கமலின் அரசியல் அரைவேக்காட்டுத்தனம்’ என்ற தலைப்பில் அந்தக்கட்டுரை வெளியாகியுள்ளது. அதில், ”கடை விரித்தேன் கொள்வாரில்லை என்பதை போல கமல்ஹாசன் நிதானமின்றி பிதற்றுகிறார். கமல் பேசுவது என்ன? ஏன் இப்படி பேசுகிறார் என்று புரியாது.கேட்போரைத் தான் சட்டையை கிழித்துக்கொள்ள வைப்பாரே தவிர அவர் ஒருநாளும் சட்டையை கிழித்துக்கொள்ள மாட்டார். கிராம சபைக் கூட்டத்தை ஸ்டாலின் காப்பியடித்ததாகக் கூறியதன் மூலம் கமல்ஹாசன் தனது அரசியல் கத்துக்குட்டித்தனத்தை வெளிச்சம் போட்டுகாட்டியுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் ”இந்த கிராமசபைக்கூட்டத்தை கருணாநிதி முதல்வராக இருந்தபோதே தனது அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களைக் கொண்டு நடத்தியுள்ளார். கமல்ஹாசனுக்கு இதெல்லாம் தெரிய நியாயமில்லை; அந்தக்காலக்கட்டத்தில் அவர் ஏதாவது கதாநாயகியுடன் டூயட் பாடி, ஆடிக்கொண்டிருந்திருப்பார். திமுக வரலாற்றை கமல்ஹாசன் படித்தறிய வேண்டும். அரசியல் கட்சி துவங்கி எதனை நோக்கிச் செல்கிறோம், பின்னால் வருபவர்களை எங்கே அழைத்துச்செல்ல போகிறோம் என்று தெளிவற்றுத்திரியும் கமல்ஹாசன், மற்றவர்களை பார்த்து வெட்கமில்லையா எனக்கேட்பது கேலிக்கூத்து” என்றும் கடுமையான பதிலை முரசொலி நாளிதழ் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY