தேச துரோகியா முருகதாஸ்?…

175
Spread the love

சர்கார் பட இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் மீது தேச துரோக சட்டப் பிரிவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படம் தீபாவளிக்கு வெளியானது. இந்நிலையில் சர்கார் படத்தில் தேவையற்ற காட்சிகள் இருப்பதாக அமைச்சர்கள் குற்றம் சாட்டினர். ஓட்டுரிமை அவசியத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்று சொல்லப்பட்ட போதிலும் இதில் முழுக்க முழுக்க அரசியலே இருக்கிறது. சிஸ்டம் சரியில்லை என்று அரசுத் துறை அதிகாரிகளின் செயல்பாடுகளைப் பற்றியும், அரசு வழங்கும் இலவச திட்டங்கள் பற்றியும் இதில் பேசப்பட்டுள்ளது. படத்தில் ஒரு சீனில் ஜெயலலிதா ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட இலவச பொருட்களை எரிப்பது போன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளதே அதிமுகவினரின் எதிர்ப்புக்கு காரணமாக அமைந்துள்ளது. இந்நிலையில் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸிற்கு எதிராக சென்னை செம்பியத்தை சேர்ந்த தேவராஜன் என்ற சமூக ஆர்வலர் ஒருவர் சென்னை மாநகர கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதில் முன்னாள் முதல்வர்கள் கருணாநிதியும், ஜெயலலிதாவும் ஏழை எளியோருக்கு பயன்படும் வகையில் இலவச பொருட்களை அறிமுகம் செய்தார்கள். சர்கார் படத்தில் இலவசப் பொருட்களை தீயிட்டு கொளுத்தும் காட்சிகள் அரசை இழிவுபடுத்தும் நோக்கத்தில் எடுக்கப்பட்டுள்ளது. ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் சீர்குலைக்கும் விதமாக முருகதாஸ் படத்தை எடுத்து வெளியிட்டுள்ளார். இவரால் சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஏற்படும். வன்முறையை தூண்டும் ஏ.ஆர். முருகதாஸை தேசத்துரோகியாக கருத வேண்டும். ஏ.ஆர். முருகதாஸின் செயல் இலவச பொருட்களை பெற்ற மக்களின் மனதையும் பாதித்துள்ளது. எனவே அவர் மீது இந்திய குற்றவியல் சட்டம் (தேசத்துரோக சட்டப்பிரிவு) 124 -ஏவின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்வதாக அந்த மனுவில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY