Spread the love

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆவணி மாத பூஜைக்காக நேற்று மாலை நடை திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடை திறந்தார். இன்று காலை 5 மணிக்கு நிர்மால்ய தரிசனம் நடந்தது. வரும் 21 ஆம் தேதி நடை அடைக்கப்படுகிறது. தற்போதைய மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரியின் பதவிக்காலமும், மாளிகை புரம் கோவில் மேல்சாந்தியின் பதவிக்காலமும் ஐப்பசி மாதத்துடன் முடிகிறது.

இதையடுத்து இன்று காலை 8 மணிக்கு சபரிமலை மற்றும் மாளிகைபுரம் கோவில்களின் புதிய மேல்சாந்தி தேர்வு நடைபெற்றது. நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட 9 பேரின் பெயர்கள் தனித்தனி சீட்டில் எழுதப்பட்டு வெள்ளிக்குடத்தில் போடப்பட்டது.

பந்தளம் ராஜகுடும்பத்தை சேர்ந்த 2 குழந்தைகள் வெள்ளிக் குடத்தில் இருந்து ஒரு சீட்டை எடுத்தனர். சபரிமலை கோவில் மேல்சாந்திக்கான சீட்டை ஆண் குழந்தையும், மாளிகைபுரம் மேல்சாந்திக்கான சீட்டை பெண் குழந்தையும் எடுத்தனர். சபரிமலை ஐயப்பன் கோவில் மேல்சாந்தி பதவிக்கு சுதிர்நம்பூதிரியின் பெயர் தேர்வு ஆனது. இவர், திரூர் பகுதியைச் சேர்ந்தவர். திருநாவ்யா நவமுகந்தன் கோவிலில் பணியாற்றியவர். மாளிகைபுரம் மேல்சாந்தி பதவிக்கு பரமேஸ்வரன் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டார். இவர், ஆலுவா பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். 

LEAVE A REPLY