அனைவரும் ராஜினாமா?.. பாண்டி காங். அரசு கவிழ்கிறது..

24
Spread the love

புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் ஆட்சியின் மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம், எம்எல்ஏ தீப்பாய்ந்தான் ஆகியோர் தங்களது எம்எல்ஏ பதவியை கடந்த மாதம் ராஜினாமா செய்தனர். அவர்களை தொடர்ந்து ஏனாம் தொகுதி எம்எல்ஏவான மல்லாடி கிருஷ்ணாராவ் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து, அதற்கான கடிதத்தை பேக்ஸ் மூலம் நேற்று சபாநாயகர் சிவக்கொழுந்துக்கு அனுப்பி உள்ளார். இந்நிலையில் இன்று காமராஜர் தொகுதி எம்எல்ஏ ஜான் குமார் தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் அளித்து  முதல்வர் நாராயணசாமிக்கு அடுத்த அதிர்ச்சியை ஏற்படுத்தினார். காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 4 பேர் ராஜினாமா செய்ததால் சட்ட பேரவை எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 10 ஆக குறைந்துள்ளது. அதன் கூட்டணி கட்சியான திமுகவிற்கு 3 எம்எல்ஏக்களும், மாஹோ தொகுதியை சேர்ந்த சுயேட்சை எம்எல்ஏ என ஆளும் காங்கிரஸ் கட்சியின் சட்டபேரவை பலம் 14 ஆக உள்ளது. ஆனால் எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் 7 எம்எல்ஏக்களும், அதன் கூட்டணியில் உள்ள அதிமுக 4 , பாஜக நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் 3 பேர் என எதிர்க்கட்சிகளின் பலம் 14 ஆக உள்ளது. புதுச்சேரி சட்டப்பேரவையில் ஆட்சி அமைக்க 16 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. இதனால் புதுச்சேரி நாராயணசாமியின் காங்கிரஸ் அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டு கவிழும் நிலை உருவாகி உள்ளது. இதன் காரணமாக முதல்வர் நாராயணசாமி எம்எல்ஏக்களுடன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில் ஒட்டு மொத்த அமைச்சரவையும் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வௌியாகி வருகின்றன. இதனால் எந்த நேரத்திலும் நாராயணசாமி ஆட்சி கவிழும் நிலை உருவாகி உள்ளது. நாளை ராகுல் காந்தி புதுச்சேரி வர உள்ள நிலையில், ஆட்சி கவிழும் நிலை உருவாகி உள்ளது காங்கிரசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

LEAVE A REPLY