தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. திருநெல்வேலி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் போட்டியிடுகிறார். இந்த தேர்தலில்போட்டியிடும் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தரப்பினர் மிகவேகமாக பிரச்சாரம் மேற்கொள்ளும் நிலையில் வேட்பாளர் அறிவிப்பு மிகவும் தாமதம் மட்டுமல்லாது என்னிடம் பணம் இல்லை என காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் கூறி விட்டதால் திமுகவினர் தேர்தல் பணியினை மேற்கொண்டுள்ளனர். நெல்லை கிழக்கு
மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன் வீடு மகாராஜநகரில் உள்ளது. அதே பகுதியில் மாவட்ட தி.மு.க., அலுவலகமும் உள்ளது. நேற்று மாலை கட்சி அலுவலகத்தில் கூட்டணி கட்சியினருடன் மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், மற்றும் மைதீன்கான் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்திக்கொண்டிருந்தனர். அப்போது மதுரை வருமான வரித்துறை உதவி ஆணையர் ராஜேந்திரன் தலைமையிலான 5 பேர் கொண்ட குழுவினர் திடீரென உள்ளே சென்று சோதனை நடத்தினர். அதிகாரிகளை கண்டதும் நிர்வாகிகள் மற்றும் திமுகவினர் அதிர்ச்சியடைந்தனர். அப்போது ஒரு பேக்கில் பணம் இருந்ததாகவும் அதனை எடுத்து சென்று ரோட்டில் நின்ற தோழமைக் கட்சி நிர்வாகி ஒருவரின் காரில் நிர்வாகி ஒருவர் போட்டதாக தெரிகிறது. அதைக் கவனித்த வருமானவரித்துறையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து மாலை 6:00 மணி முதல் இரவு 8.05 வரையிலும் சோதனை நடந்தது. ஆவுடையப்பன் உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது . தகவல் அறிந்ததும் திமுக எம்எல்ஏ எம்.எல்.ஏ.அப்துல் வகாப் மற்றும் கூட்டணி கட்சியினர் வந்து மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். தி.மு.க., அலுவலகத்தில் பணம் கொடுக்கும் தகவலை சில தினங்களாகவே கண்காணித்து வந்த வருமான வரித்துறை நேற்று சோதனை நடத்தி 32 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.