ரோட்டில் இறந்து கிடந்தவர் வங்கிகணக்கில் ரூ.20 லட்சம்…

104
Spread the love
மதுரை பனகல் சாலையில் அரசு ஆஸ்பத்திரி எதிரே உள்ள சாலையோரத்தில் 60 வயதான ஒருவர் இறந்து கிடந்தார். இதுபற்றி அறிந்த போலீசார் விரைந்து சென்று விசாரணை செய்தார்கள். இறந்து கிடந்தவர் அருகே 2 பைகள் இருந்தன. அவற்றை போலீசார் சோதனை செய்த போது, அதில் 2 வங்கி பாஸ் புத்தகங்கள் இருந்தன. அதன் மூலம் அவர், மதுரை நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த ராதா (60) என்பது தெரியவந்தது. மேலும் அவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழக இயற்பியல் துறை ஆய்வகத்தில் வேலை பார்த்து, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றவர் என்பதும் தெரியவந்தது.
 
மேலும் அவரது கூட்டுறவு வங்கிக்கணக்கில் 20 லட்சத்து 5 ஆயிரத்து 869 ரூபாய் வைப்பு தொகையாக இருந்தது தெரிந்தது. இது தவிர அவர் கடந்த 2019-ம் ஆண்டு அவரது மற்றொரு வங்கி கணக்கில் இருந்து ரூ.36 லட்சம் எடுத்ததும் தெரியவந்தது. எனவே வங்கி பாஸ் புத்தகத்தில் உள்ள முகவரியை வைத்து போலீசார் அவரது உறவினர்களிடம் விசாரித்தனர். இறந்த ராதாவுக்கு திருமணமாகவில்லை. சமீபகாலமாக மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளார். இவருக்கு அண்ணன், தங்கை உள்ளனர். போலீசார் அவர்களுக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த அவருடைய அண்ணனிடம் போலீசார் விசாரித்த போது, கடந்த 6-ந் தேதி உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த ராதாவை அவருடைய தங்கை மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்துள்ளார். அங்கு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் திடீரென்று மாயமானார். அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாமல் போலீசில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில்தான் ராதா, ஆஸ்பத்திரி முன்பு இறந்து கிடந்ததாக வந்த தகவலை தொடர்ந்து இங்கு வந்ததாக தெரிவித்தார். அதை தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனை செய்து பின்னர் உறவினர்களிடம் வழங்கப்பட்டது.

LEAVE A REPLY