Spread the love

சரவணபவன் ஓட்டல் அதிபர் ராஜகோபால் (71). இவருக்கு 2 மனைவிகள். இந்நிலையில் தனது ஓட்டலில் வேலை செய்த ஒரு ஊழியரின் மகள் ஜீவஜோதியை 3-வது மனைவியாக்கி கொள்ள விரும்பினார். இதனால் அவரது கணவர் பிரின்ஸ் சாந்தகுமாரை கூலிப்படையை ஏவி கொலை செய்ததாக வழக்கு பதிவானது. இந்த வழக்கில் 2004 ம் ஆண்டு அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மேல்முறையீட்டில் 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்த தீர்ப்பை கடந்த மார்ச் மாதம் சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது. ஜூலை 7 ஆம் தேதிக்குள் பூந்தமல்லி கோர்ட்டில் சரணடைய வேண்டும் என்று உத்தரவிட்டது.

ஆனால் அவர் சரணடையவில்லை.  இந்நிலையில் நேற்று உச்சநீதிமன்றத்தில் நேற்று அவர்  சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருப்பதால் சரணடைய முடியவில்லை. அவர் தண்டனையை வாழ்நாள் முழுவதும் மருத்துவமனையில் தங்கி அனுபவிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த மனு இன்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது  உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும், எழுந்து நடப்பதற்கே இரண்டுபேர் உதவி தேவைப்படுவதாகவும் தெரிவித்த ராஜகோபால் தரப்பு, நீதிமன்றத்தில் சரணடைவதில் இருந்து விலக்கு கோரியது. 

இதனால் கோபமடைந்த நீதிபதிகள், உங்களுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நிறைவடையும் நிலையில், இறுதி நாளில் தான் இதுபோன்று மனுத்தாக்கல் செய்வீர்களா என்று காட்டமாக கேட்டனர். மேலும், ஒரு நாள் கூட உங்களால் சிறையில் இருக்க முடியாதா? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் ராஜகோபால் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உடனடியாக சரணடைந்து தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

LEAVE A REPLY