அண்ணாவிற்கு பிறகு மு.க.ஸ்டாலின்……

225
Spread the love

முதல்வர் பதவி ஏற்பின் போது ஒலித்திட்ட மு.க.ஸ்டாலின் எனும் நான்…. என்ற வார்த்தையை கேட்க கடந்த 10 ஆண்டுகளாக திமுகவினர் தவியாய் தவித்து வந்தனர். தொடர்ந்து 10 வருடம் ஆட்சிகட்டிலில் இல்லை என்றாலும், திமுக தலைவர் கருணாநிதி இழப்பு பேரிடியாக இறங்கியது என்றாலும் மனம் தளராது தொடர்ந்து மக்கள் பணியாற்றி, தற்போது ஆட்சியை திமுக பிடித்திருக்கிறது என்றால் அதற்கு ஒரே தாரக மந்திரம் மு.க.ஸ்டாலின்தான். 1953 மார்ச் 1ம் தேதி கருணாநிதி-தயாளு அம்மாளுக்கு 3வது மகனாக பிறந்தவர் மு.க.ஸ்டாலின். கருணாநிதி தனது அரசியல் வாரிசாக கொண்ட வர நினைத்தது மு.க.முத்துவைதான். ஆனால் அவர் திரையுலகிலும் ஜொலிக்கவில்லை. அரசியலுக்கும் வரவில்லை. அதே சமயத்தில் அதிர்ஷ்ட வசமாக அரசியலுக்கு வந்தவரல்ல மு.க.ஸ்டாலின். கோபாலபுரம் இளைஞர் திமுக என்ற அமைப்பை அவரும், அவரது நண்பர்களும் சேர்ந்து தொடங்கினர். ஆனால் அதுதான் பின்னாளில் பிரதான திமுக இளைஞரணியாக மாறும் என்று அப்போது ஸ்டாலின் அறிந்திருக்கவில்லை. 1973ஆம் ஆண்டு அவர் திமுக பொதுக்குழு உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டதற்கு காரணம் அவர் கருணாநிதியின் மகன் என்பதற்காக மட்டும் அல்ல. அவர் திமுகவின் வெற்றிக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டும், நாடகங்கள் நடத்தி அதன் மூலம் திமுகவின் கொள்கையை பரப்பியதே காரணம். திருமணமாகி ஐந்தே மாதங்கள் ஆன நிலையில் மதுராந்தகத்தில் பிரச்சார நாடகம் நடத்தி விட்டு வீடு திரும்பியவர் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஓராண்டு சிறையில் அடைக்கப்பட்டதே, அவரை முழுநேர அரசியலுக்கு கொண்டு வந்து சேர்த்தது.  ஸ்டாலினிடம் அபரிமிதமான வளர்ச்சி, திறமை இருந்தும் 1989 அதன் பின்னர் 1996ல் கருணாநிதி ஆட்சிக்கு வந்த போது,  கருணாநிதி வாரிசு அரசியல் செய்கிறார் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகி விடக்கூடாது என்பதற்காக, தனது அமைச்சரவையில் மு.க.ஸ்டாலினை சேர்த்துக்கொள்வில்லை. கருணாநிதி தரவில்லை என்றாலும் அதனை கேட்டு ஸ்டாலின் பெறவில்லை. அதற்கு காரணம் தந்தையை மீறி எதும் செய்து விடக்கூடாது என்ற அடக்கம்தான். பதவிக்காக முண்டி அடித்துக்கொண்டு நிற்கவோ, சண்டையிட்டு பெற்றுக்கொள்ளாமல் பொறுமை காத்ததே மு.க.ஸ்டாலின் இத்தனை உயர்விற்கு காரணம். ஜெயலலிதா காலமானபோது கூட அரசியலில் ஏற்பட்ட வெற்றிடத்தை பயன்படுத்தி அவர் ஆட்சியை கவிழ்த்து, முதல்வர் பதவியை பிடிக்காமல் அமைதி காத்தது அவரது தொண்டர்களுக்கே எரிச்சலை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் அந்த குறுக்கு வழியை அவர் தேர்தெடுக்காததே இன்று பெரும்பான்மை வெற்றிக்கு காரணமாக அமைந்தது என்பதில் சந்தேகம் இல்லை. தனது வாய்ப்பிற்காக சற்றும் மனம் தளராமல் பொறுமை காத்து தற்போது நிருபித்து இருக்கிறார் மு.க.ஸ்டாலின். தமிழக முதல்வர்களாக இருந்த ராஜாஜி, காமராஜர், பக்தவச்சலம், கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தேசிய அளவிலோ, மாநிலங்கள் அளவிலோ உள்ள கட்சிகளின் ஆதரவு அல்லது பின்புலத்தில் ஆட்சி அமைத்து இருந்திருக்கிறார்கள். மத்திய ஆளும் கட்சியையும், மாநில ஆளும் கட்சியையும் ஒரு சேர எதிர்த்து முதல்வரானது அண்ணாவிற்கு பிறகு மு.க.ஸ்டாலின்தான்.  இந்திராகாந்தி பிரதமராக 65ஆம் ஆண்டு முதல் 69 ஆண்டு வரை இருந்தாலும் காங்கிரஸ் மூத்ததலைவர்கள் கட்டுப்பாட்டிலேயேதான் இருந்தார். காங்கிரஸ் பிளவிற்கு பின்னரே அவர் விஸ்வரூபம் எடுத்தார். அதே போல தந்தை கருணாநிதிக்காக அடக்கி வாசித்து வந்த மு.க.ஸ்டாலின் இனிமேல் எடுக்கப்போகும் விஸ்வரூபத்தை பொறுத்திருந்து பார்ப்போம்…..!

LEAVE A REPLY