உள்ளாட்சி தேர்தல் பயம்? சொத்து வரி உயர்வு திடீர் நிறுத்தம்

266
Spread the love

 கடந்த 2018 -ஆம் ஆண்டு ஏப். 1- ஆம் தேதி குடியிருப்புகள், வணிக கட்டடங்கள் உள்ளிட்டவற்றுக்கு சொத்து வரி, அதிரடியாக உயர்த்தப்பட்டது. 

இதில் குடியிருப்புக் கட்டடங்களுக்கு 50 சதவீதத்துக்கு மிகாமலும், வாடகை குடியிருப்புகளுக்கு 100 சதவீதத்துக்கு மிகாமலும், குடியிருப்பு அல்லாத கட்டடங்களுக்கு 100 சதவீதத்துக்கு மிகாமலும் சொத்து வரியை உயர்த்தி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இது பொதுமக்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
 

இந்நிலையில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சென்னையில் இன்று அளித்த பேட்டி; உள்ளாட்சி அமைப்புகளில் அமல்படுத்தப்பட்ட சொத்து வரி உயர்வு நிறுத்தி வைக்கப்படுகிறது. உயர்த்தப்பட்ட சொத்து வரியை குறைப்பது குறித்து பரிசீலிக்க நிதித் துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில், உயர்த்தப்பட்ட சொத்து வரியை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை, 2018 ஏப்ரல் 1- ஆம் தேதிக்கு முன்பு செலுத்தி வந்த வரியையே செலுத்தலாம். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கூடுதலாக வசூலிக்கப்பட்டு வந்த வரித் தொகை, அடுத்தடுத்த அரையாண்டுகளில் வரவு வைக்கப்பட்டு சரி செய்யப்படும்.

தற்போது, வரி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டதற்கும், உள்ளாட்சித் தேர்தலுக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை. இவ்வாறு அமைச்சர் பேட்டியளித்தார்.

LEAVE A REPLY